திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் திடீர் கைது! 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது குறித்து...
முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் நடந்தது.
கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பேசுகையில், முதல்வர் விஜய் பேரவையை பூட்டினாலும் எலும்பை உடைப்போம் என மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்றுவிட்டனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி மற்றும் போலீசார் திங்கள்கிழமை காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வீட்டுக்கு வந்தனர்.
அப்போது நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த எம்எல்ஏவிடம் தங்களை கைது செய்ய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். அதற்குள் தகவல் அறிந்து எம்எல்ஏ வீட்டு முன்பு திரண்ட திமுகவினர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டவாறு போலீஸ் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த திமுகவினர்காவல்துறை வாகனங்களை மறித்து அமர்ந்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டு மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட பேரவை மார்க்கண்டேயன் தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்ட பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Threat against Chief Minister Vijay... Vilathikulam DMK MLA Markandeyan arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.