FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் ஆட்சி என்று சொன்னாலும் லஞ்சம்!விவசாயிகள் வேதனை - டிடிவி தினகரன்

முதல்வர் விஜய் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பற்றி...

Updated On : 21 ஜூலை 2026, 3:24 pm IST
முதல்வர் விஜய் - டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைவதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் - லஞ்சம் கேட்போரிடம் இது முதல்வர் விஜய் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!

Advertisement

Advertisement

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. நெல் கொள்முதல் செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 லஞ்சம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கெனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. "லஞ்சம் கேட்டால், 'இது முதல்வர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதல்வர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுவே முதல்வர் விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர். தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

summary

AMMK General Secretary TTV Dhinakaran stated on Tuesday (July 21) that farmers are distressed because bribes are being demanded even after the administration was termed the "Chief Minister Vijay government."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments