பாமக தலைவர் பதவி: வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்!
ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திரும்ப பெற்றார்.
இதன்மூலம், பாமக தலைவராக அன்புமணியே தொடர்ந்து செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
பாமக பெயர், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும், கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டம் அனுமதித்தால் இந்த விவகாரம் தொடர்பாக, ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை அணுகலாம். அந்தக் கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் எனக் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே இருந்து வந்த தந்தை - மகன் மோதல் அண்மையில் முடிவுக்கு வந்தது.
ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி தன்னுடைய குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று(ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தங்களுக்குள்ளான பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொண்டதாகவும், வழக்கை திரும்ப பெருவதாகவும் மனு தாக்கல் செய்தார்
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தது.
Ramadoss, the founder of the Pattali Makkal Katchi (PMK), withdrew the case he had filed in the Chennai Civil Court seeking to be declared the party's leader.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.