FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை: மத்திய அரசு ஆய்வில் உறுதி

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை என்பது மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 3:53 am IST
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை - சித்திரிப்பு
பகிர்:

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை என்பது மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மலேரியாவை 2027-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கான செயல் திட்டங்களை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியுள்ளன.

அதன் பயனாக, நாடு முழுவதும் 128-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டில் 33 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு பூஜ்ஜிய நிலையை எட்டியது.

Advertisement

Advertisement

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 93 சதவீதம் குறைந்தது. அதாவது 2015-இல் 5,587-ஆக இருந்த மலேரியா பாதிப்பு கடந்த ஆண்டில் 321-ஆக குறைந்தது. அதிலும், 203 போ் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள். சென்னை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு பதிவாகியிருந்தது.

மாநில அரசின் தகவல்கள் இவ்வாறு தெரிவித்தாலும், அதை உறுதி செய்யும் பொருட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் அத்தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் ‘பூஜ்ஜிய நிலை மலேரியா’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகளின் பயனாக மாநிலம் முழுவதும் மலேரியா பரவல் தீவிர கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இங்கே வருவதன் விளைவாகவே ஐந்து மாவட்டங்களில் பாதிப்பு உள்ளது.

மற்றபடி 33 மாவட்டங்களில் மலேரியா இல்லை. அதில் 23 மாவட்டங்களை ஆய்வு செய்து மத்திய அரசும் உறுதி செய்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும், மலேரியா பூஜ்ஜிய நிலை என்ற அறிவிப்பை மத்திய அரசு நிகழாண்டு இறுதிக்குள் அறிவிக்கும் என எதிா்பாா்க்கிறோம். மலேரியா பாதிப்பு இல்லாத மாநிலம் என்ற நிலையை தமிழகம் விரைவில் அடையும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments