எம்.ஜி.ஆருக்குப் பின்... காவிரிக்காக பெங்களூரு செல்லும் விஜய்!
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு காவரி நீருக்காக பெங்களூரு செல்லும் முதல்வர் ச. ஜோசப் விஜய்யைப் பற்றி...
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு காவரி நீருக்காக பெங்களூரு செல்லும் முதல்வர் ச. ஜோசப் விஜய், கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
பெங்களூரு செல்லும் முதல்வர் விஜய்: காவிரி நதி நீர் பங்கீடு, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய், வருகிற ஆக. 3 ஆம் தேதி கர்நாடகம் சென்று அங்கு முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேசவிருக்கிறார்.
இதனை தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் வினோத்தும், கர்நாடக துணை முதல்வரும், அமைச்சருமான ஜி. பரமேஷ்வரா இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல்களை இதுவரை வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து பேசினால் இந்த பிரச்னையில் எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை; இதனால் முதல்வர் விஜய், கர்நாடகத்துக்குச் செல்லக்கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திரும்பும் வரலாறு: கர்நாடகத்துக்கு செல்வதற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து முதல்வர் ஒருவர் காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகம் செல்வது இது முதல்முறை கிடையாது. அதேபோன்று காவிரிப் பிரச்சினை நேற்று தொடங்கியது கிடையாது. இதற்காக தமிழ்நாடு அரசியல் வரலாற்றையும் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
1980-களின் மத்தியிலும் இதுபோன்ற பிரச்சினைகளில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்துக்கான காவிரி நீரைப் பெற்ற வரலாறும் உண்டு. 1980-களில் நிலவிய கடுமையான வறட்சி மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடியைக் காப்பாற்றுவதற்காக 1986 ஜனவரி மற்றும் 1987 பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, அவரது அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்களை பெங்களூருக்கு அனுப்பியிருந்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
அதன்பின்னர், 1986 ஆம் ஆண்டு பிப்ரவரியில், தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்களான ப.உ. சண்முகம் மற்றும் ஒய்.எஸ்.எம். யூசுப் ஆகியோர் நான்கு நாள்கள் இடைவெளியில் தனித்தனியாக பெங்களூரு பயணம் மேற்கொண்டு, கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவைச் சந்தித்தனர்.
அப்போது, 10 டிஎம்சி அடி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வரிடம் தமிழ்நாடு அரசு கேட்டுகொண்டது. மேலும், கர்நாடக அரசை சம்மதிக்க அவைக்க மத்திய அரசின் உதவியையும் தமிழ்நாடு நாடியது. கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த கர்நாடக அரசு, தமிழகத்தின் அவல நிலையைப் புரிந்துகொண்டாலும், கோரிக்கையை மறுத்தது.
அதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி, புதுச்சேரி முதல்வர் ஃபாரூக் மரிகாருடன் கர்நாடகத்துக்குச் சென்று அம்மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவைச் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
அதைத்தொடர்ந்து, 1987-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இரண்டு முறை பெங்களூருவுக்கு பயணம் மேற்கொண்டு, அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எச்.டி. தேவே கௌடாவைச் சந்தித்தார். அப்போது, ஏற்கெனவே திறந்துவிடப்பட்ட 5 டிஎம்சி தண்ணீருடன் கூடுதலாக 25 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
தண்ணீருக்கு ஈடாக மின்சாரம்: முதல்முறை நடந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் வறட்சி நிலவினாலும் 5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடத் தயாராக இருப்பதாக அமைச்சர் தேவே கௌடா கூறியிருந்தார். ஆனால், தமிழ்நாடு கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், அதற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் தேவே கௌடா முன்வைத்திருந்தார்.
பின்னர், எம்.ஜி.ஆரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெங்களூருவுக்குத் திரும்பி இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, கர்நாடகத்துக்குச் சென்று அம்மாநில முதல்வர்களாக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் குண்டு ராவை சந்தித்து, காவிரி நீர் திறக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதன்பின் வந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நீருக்கான உத்தரவுகளை பெற்றனர்.
இந்த வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில், ஆக. 3 ஆம் தேதி டி.கே. சிவகுமார் - விஜய் சந்திப்பில் என்னென்ன முடிவுகள் எட்டப்படும்? காவிரி நீர் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்குமா? என்ன செய்யப் போகிறார் தமிழ்நாடு முதல்வர் விஜய்?
Following former Chief Minister M.G.R., Chief Minister S. Joseph Vijay is set to travel to Bengaluru to hold talks with the Karnataka Chief Minister regarding the Cauvery water issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.