அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்தி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை!
அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்தி நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்தி, அந்தக் கட்சியின் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் பூக்கடை மகேந்திரன்.
இவர், அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலராக உள்ளார். அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட அவர்,
Advertisement
Advertisement
”மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும், நமது இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் எனக்கு மன வேதனை தருகிறது. என்னைப் போன்ற பல இளைஞர்களின் மனதிற்கு ரொம்ப வேதனையாக உள்ளது. எனது இறப்பிற்குப் பிறகாவதுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் இணைந்து அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும்.
அனைத்து தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும், இதுவரை என்னோடு பயணித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
என்னுடைய உடலுக்கு நான் வணங்கும் மனித தெய்வம் எடப்பாடியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினால் என்னுடைய ஆத்மா சாந்தி அடையும், நன்றி விடைபெறுகிறேன்” என விடியோ வெளியிட்டு திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில், மகேந்திரனின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அதிமுக தொண்டர் மகேந்திரன் உடலுக்கு, இறுதி மரியாதை செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாள் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.