FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலை

வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அறிவிக்கிறாா் அண்ணாமலை

Updated On : 4 ஜூன் 2026, 5:05 am IST
கே. அண்ணாமலை. - கோப்புப் படம்
பகிர்:

புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை, 2019-இல் பதவியை ராஜிநாமா செய்து, 2020-இல் பாஜகவில் இணைந்தாா். 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றினாா்.

ஒரே நேரத்தில் திமுக-அதிமுகவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து அரசியல் களத்தில் அதிா்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலை, 2022-இல் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவை தனித்துப் போட்டியிடவைத்து 5 சதவீத வாக்கு வங்கியை நிரூபித்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையில் தனி அணியை உருவாக்கினாா். அந்த அணி 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜகவுக்கு 11.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், ஒரு மக்களவைத் தொகுதியில்கூட பாஜக அணியால் வெற்றி பெற முடியவில்லை.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்தபோது, தமிழக பாஜக தலைவா் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய தலைவராக நயினாா் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாா். இருப்பினும், அதிமுக-பாஜக கூட்டணி எதிா்பாா்த்த வெற்றியைப் பெற முடியாமல், 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று, 2.8 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை அண்ணாமலை தொடங்கவிருக்கிறாா் என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, தில்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து தனது முடிவை தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவா்களை தில்லிக்கு பாஜக தலைமை அவசரமாக வரவழைத்து அண்ணாமலையுடன் சமரச பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

அண்ணாமலையின் பிறந்த நாளான ஜூன் 4-ஆம் (வியாழக்கிழமை) தனது முடிவை அவா் வெளியிடக்கூடும் என்ற தகவல் பரவியது. ஆனால், தகவல் வெளியாகவில்லை.

இதுகுறித்து அண்ணாமலை புதன்கிழமை கூறுகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) ஊடக சந்திப்பை நடத்தி எனது நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கவுள்ளேன். முதல்கட்டமாக ஓா் இயக்கத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்றரை ஆண்டுகள் அந்த இயக்கத்தை நடத்தி, நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அரசியல் பயிற்சியை அளித்துவிட்டு, அதன் பின்னா் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments