FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

விஜய்க்கு மாற்றா? அண்ணாமலை மாநாடும் அரசியல் பாதையும்!

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடும், அண்ணாமலையின் அரசியல் பாதை பற்றியும்...

Updated On : 13 ஜூலை 2026, 5:09 pm IST
மாநாட்டில் கே. அண்ணாமலை... - X | K Annamalai
பகிர்:

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியாக மாறப் போகும் ‘வீ தி லீடர்ஸ்’ - இது நம்ம இயக்கம் அமைப்பின் முதல் மாநாட்டில், தனது அரசியல் கொள்கையையும், அரசியல் பாதையையும் அந்த அமைப்பின் நிறுவனரும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை விளக்கியுள்ளார்.

கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, விருப்ப ஓய்வுபெற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஜூலை 2021-ல் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை, சுமார் 4 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.

சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் அண்ணாமலையின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரின் பின்தொடர்பவர்களாகவும், பாஜக ஆதரவாளர்களாகவும் மாறினர்.

Advertisement

Advertisement

இதனிடையே, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மீண்டும் அதிமுகவுடன் பாஜக மேலிடம் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நிலையில், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினார்.

தொடர்ந்து கட்சித் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, கடந்த ஜூன் 5 அன்று பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அன்றைய தினமே வீ தி லீடர்ஸ் அமைப்பைத் தொடங்குவதாக அறிவித்த அண்ணாமலை, உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கினார். முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தனர்.

அடுத்த 37 நாள்களில் 6 லட்சம் உறுப்பினர்கள் என தற்போது (ஜூன் 13, பிற்பகல் 3 மணி) மொத்தம் 19.14 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், பாஜக இளைஞர் - விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இது நம்ம இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளனர்.

மேலும், பாஜகவின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடங்கி, அடிநிலைத் தொண்டர்கள் வரை பரவலாக பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, வீ தி லீடர்ஸ் அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்த அண்ணாமலை, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேவுள்ள ஆச்சிப்பட்டியில் தனது அமைப்பின் முதல் மாநாட்டை ’போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடித்துள்ளார்.

யாரை எதிர்க்கப் போகிறார்?

பாஜகவிலிருந்து விலகி தனிக் கட்சியை அண்ணாமலை தொடங்கியவுடன், அவர் பாஜகவின் ’பி டீம்’மாகத்தான் செயல்படப் போகிறார் என்ற விமர்சனத்தை முன்வைத்தனர்.

தமிழ்நாட்டில் பாஜகவின் மதவாத அரசியல் எடுபடாததால், அண்ணாமலை மூலம் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயல்கிறது என்று திமுக, தவெக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் முதல் மாநாட்டில் உரையாற்றிய அண்ணாமலை, எந்த அரசியல் கட்சி அல்லது கட்சியின் தலைவர்கள் மீதும் எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

”இது அரசியல் மாநாடு கிடையாது, இன்னொரு கட்சியைத் திட்டுவதற்கும், மற்ற அரசியல் தலைவர்கள் சரியில்லை எனக் கூறுவதற்கும் இந்த மாநாடு கிடையாது. ஆட்சிக்கு வந்தவர்களை வந்தவுடன் இடையூறு செய்ய வேண்டும் என்பதற்கான மாநாடு கிடையாது. இந்த மாநாடு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக கூடியவர்களின் மாநாடு” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது விமர்சனத்தை முன்வைக்காமல், “தவெக அமைச்சரவையில் பெரும்பாலானோர் முதல்முறை அமைச்சர்கள். அவர்கள் தடுமாறுவது இயல்பு. அப்படித் தடுமாறுபவர்களைத் தட்டிக் கொடுப்பதுதான் ஒரு நல்ல சமுதாயத்துக்கு அழகே தவிர, அவர்களை கீழே அழுத்துவது அல்ல” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, ”கோயில்கள், பள்ளிகள் அருகிலுள்ள 717 மதுபானக் கடைகளை மூடிவிட்டதாக முதல்வர் விஜய் தெரிவித்தார், ஆனால், நாங்கள் ஆய்வு செய்ததில் இன்னும் பல இடங்களில் கோயில், பள்ளிகள் அருகே 500 மீட்டருக்குள் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அவற்றையும் மூட அரசுக்கு வலியுறுத்தி ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும், வெறுப்பு அரசியலை அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், திமுக அரசு ஆணவத்தோடு அரசியல் செய்ததன் விளைவே ஆட்சி அதிகாரத்தை மக்கள் பறித்துள்ளனர் என்று விமர்சித்தார்.

பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சிக்காதது ஏன்?

என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளில் இருந்து இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். ஒரு கட்சியில் இருந்து எதற்காக வெளியேறுகிறோம். அந்த கட்சியின் மீது கோபம் இருக்கும். அதனைப் பொறுப்புணர்ச்சியுடன் வெளிகாட்ட வேண்டும். பழிச்சொல் போட்டு வெளியேறக் கூடாது” என்றார்.

அண்ணாமலையின் அரசியல் கொள்கை குறித்து மக்கள் மத்தியில் நிலவிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”இந்தியன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையே. இந்தியாவில், நமது தமிழகம் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் போராடுகிறோம். மதம், ஜாதி என்பது இந்த இயக்கத்திற்கு வெளியே. இந்த அரசியல் இயக்கத்தில் அனைவரும் சமம்” எனத் தெரிவித்தார்.

மேலும், மற்றவர்கள் மீது பழிச்சொல் சுமத்தும் அரசியலை, தான் முன்னெடுக்கப் போவதில்லை என்றும், அடுத்த ஆறு மாத காலங்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சமூகப் பிரச்னைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடிமட்டத்தில் இருந்து ஆர்வமுள்ள சாதாரண மக்களுக்கு அரசியல் கற்பித்து, அவர்களை நல்ல தலைவர்களாக மாற்றுவதே நோக்கம் என்றும், 2031-ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வீ தி லீடர்ஸ் அமைப்பில் இணைந்துள்ளவர்களில் 54 சதவிகிதம் பேர் 39 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள். அவர்கள்தான் 2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்கள்தான் 2031-லும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள். நம்மை நம்பி மக்கள் ஆட்சிப் பொறுப்பை தருவார்கள் என்றார்.

ஆனால், தவெக கட்சி தொடங்கி முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தனது கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் வெளிப்படையாக அறிவித்தார். அதுபோன்று அண்ணாமலை எதுவும் அறிவிக்கவில்லை.

வெறுமனே போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாநாடாக மட்டுமே நடத்தி முடித்துள்ளார்.

மெய் சமூகநீதி, நிலையான வளர்ச்சி, வேளாண் எழுச்சி, பண்பாட்டு மீள்ச்சி, ஆட்சிப் புரட்சி ஆகியவை இலக்காக மாநாட்டின் இறுதியில் அண்ணாமலை தெரிவித்தார்.

2031-ல் ஆட்சி மாற்றத்தை இலக்காக அறிவித்துள்ள அண்ணாமலை, தான் தொடங்கும் அரசியல் கட்சியைத் தவெகவுக்கு மாற்றாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தவெகவில் இருக்கும் குறைகளைத் தனது கட்சியின் நிறைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தவெக தலைவராக இருந்தபோதும் சரி, முதல்வரான பிறகும் சரி, திமுகவை கடுமையாக விமர்சிக்கும் அரசியலை விஜய் முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக யாரையும் தூற்றாத ’டீசண்ட்’ அரசியல்வாதி என்ற பிம்பத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சித்து வருகிறார்.

தற்போதைய தவெக அரசில் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் பலருக்கு இன்னமும் அரசியல் புரிபடவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில், பழிசுமத்தும் அரசியலைத் தான் முன்னெடுக்கப் போவதில்லை, அரசியல் பயிற்சி பெற்ற இளைஞர்களை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டுவரப் போகிறேன், தனிநபரை போற்றும் அரசியலாக இருக்காது என்பதை மீண்டும் மீண்டும் அண்ணாமலை பதிய வைக்கிறார்.

அரசியல் கட்சியாக மாறவிருக்கும் ’இது நம்ம இயக்கம்’ சார்பில் உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை யார் போட்டியிட வேண்டுமென்றாலும், அவர்கள் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று அமைப்பு தொடங்கிய நாளே அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதற்காக, கோவையில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அரசியல் பயிற்சி மையத்தை அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தொடங்கப் போவதாகவும் மாநாட்டில் அறிவித்துள்ளார்.

மேற்கு மாவட்டமான கோவையில் முதல் மாநாட்டை முடித்துள்ள அண்ணாமலை, அடுத்ததாக வருகின்ற ஜூலை 26 அன்று, தென் மாவட்டமான தூத்துக்குடியில் கோயில் நகரமான திருச்செந்தூரில் இரண்டாவது மாநாட்டை நடத்தவுள்ளார்.

அதற்குள் 50 லட்சம் உறுப்பினர்களை எட்டி, அரசியல் கட்சியாக அறிவிக்க வாய்ப்பு குறைவு. இன்னும் 30 லட்சம் உறுப்பினர்கள் இணைய கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தொடர்ந்து அரவணைப்பு அரசியலைத் தான் அண்ணாமலை மேற்கொள்ளப் போகிறாரா? அல்லது காலப்போக்கில் முதல்வர் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!

summary

An alternative to Vijay? Annamalai conference and his political path!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments