முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி! 125 நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைப்பு!

விபி- ஜி ராம் ஜி திட்டமான 125 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு 4.1 சதவிகிதமாகக் குறைப்பு

Updated On : 4 ஜூன் 2026, 12:10 pm IST
125 நாள் வேலைத் திட்டம் - பிரதிப் படம்
பகிர்:

விபி- ஜி ராம் ஜி திட்டமான 125 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு 4.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

125 நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி கூறியிருப்பதாவது, மத்திய அரசால் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 125 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவு ரூ. 3,923 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது பெரும் அநீதியாகும். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான இந்த முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.

கிராமப்புறங்களில் பொதுக்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்; ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ள மத்திய அரசு, 125 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் ஜூலை முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்துக்காக இந்தியா முழுவதும் ரூ. 95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்துக்கு வெறும் ரூ. 3,923 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் வரைவுத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 நாள் வேலைத் திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு வெறும் 4.09 சதவிகிதம்தான். கடந்த காலங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 10 சதவிகிதத்துக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது அதை 4.09 சதவிகிதமாகக் குறைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழகத்துக்கு 2023 - 24 ஆம் ஆண்டில் ரூ. 12,136.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024 - 25 ஆம் ஆண்டில் ரூ. 7,587.58 கோடியும், கடந்தாண்டில் ரூ.7,702.89 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. இதுவே தமிழகத்தின் தேவைக்கு போதவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனால் கடந்தாண்டில் தொடக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 16 நாள்களும், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட பிறகு சராசரியாக மேலும் 7 நாள்களும் வேலை வழங்கப்பட்டன. ஆனால், நடப்பாண்டில் அதைவிட குறைவாக இப்போது ரூ. 3,923 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனை நாள் வேலை வழங்கப்படும் என்பது தெரியவில்லை.

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் முறையில் செய்யப்பட்ட மாற்றம்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கு எவ்வளவு மனித நாள்கள் வேலை தேவையோ, அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இப்போது 125 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், மத்திய அரசின் மறைமுக வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க பின்பற்றப்படும் 16 ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் கடைபிடிக்கப்படுவதுதான் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கு காரணம். இந்த அநீதியான முறையை ஏற்க முடியாது.

மத்திய அரசின் மொத்த வரி வருமானத்தில் சுமார் 10 சதவிகிதம் தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் சுமார் 9.4 சதவிகித பங்களிப்பை தமிழ்நாடுதான் வழங்குகிறது.

ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும்போது, அதில் வெறும் 4.07 சதவிகிதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது.

மக்கள்தொகை அதிகமுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கும், பிற தென் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியை ஊக்குவித்ததற்காக  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்கக் கூடாது; தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் குறைந்தது 50 விழுக்காட்டை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும்நிலையில், நிதிப் பகிர்வில் செய்யப்படும் அதே அநீதியை 125 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கும் நீட்டிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இந்த முறையை மத்திய அரசு மாற்ற வேண்டும்.

125 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு இத்திட்டத்தில் வேலைகேட்டு பதிவு செய்துள்ள மக்களுக்கு ஆண்டுக்கு 12 நாள்கள்கூட வேலை வழங்க முடியாது. ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதாகக் கூறிக் கொண்டு அதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான நாள்கள் மட்டுமே வேலை வழங்கும்  வகையில் நிதி ஒதுக்குவது நியாயமாக இருக்காது.

மாநில உரிமைகளுக்கு எதிராக இந்த நிதி ஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதற்கு பதிலாக தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும் பழைய முறையையே தொடர வேண்டும் என்றும், திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் குறைந்தது 10 விழுக்காட்டை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்; வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

summary

Funding Allocation for Tamil Nadu Under 125-Day Work Scheme (VBG RAM G) Reduced to 4.1%!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.