717 மதுக்கடைகள் மூடல்: அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு!
717 மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்.
717 மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது:
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைகளுக்கு அருகில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பயணிகளுக்கான இருக்கை வசதி இல்லை. பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி சுகாதாரமாக இல்லை. மிக மோசமான இந்த நிலையை விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
இதே போல, திண்டுக்கல் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அது சரியான இடமாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
திண்டுக்கல்லில் உள்புற சாலைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துடன் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் என்ற முறையில் பொறுப்பேற்ற 20 நாள்களில் தனி நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வந்த ரூ.1,200 கோடி அரசுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறேன்.
தமிழகத்தில் அரசு மதுக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிப்பது வரும் சட்டப்பேரவைத் கூட்டத் தொடருக்கு முன்பாக தடுத்து நிறுத்தப்படும். மதுப் புட்டிகளில் என்ன விலை குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்தக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த 717 கடைகள் கணக்குக் காட்டுவதற்காக மூடப்படவில்லை. அதிகளவில் வர்த்தகம் நடைபெறும் கடைகள்கூட, மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற காரணத்திற்காக மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளால் ஓராண்டில் அரசுக்கு ரூ. 8,000 கோடி முதல் ரூ. 11,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்” என்றார்.