FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இணைய மோசடிகள்: 2025-ம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடி இழப்பு!

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இணையவழி மோசடிகளால் ஏற்பட்டுள்ள இழப்பு பற்றி...

Updated On : 21 ஜூலை 2026, 6:28 pm IST
பகிர்:

கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் வசிப்போர் எல்லை தாண்டிய இணையவழி மோசடிகளால் 2025-ம் ஆண்டில் மட்டும் 11 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த இழப்பு 2023-ம் ஆண்டை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் குறிப்பாக கம்போடியா, மியான்மர் பகுதிகளில் போலியான காதல் செயலிகள் மற்றும் கிரிப்டோகரன்சி முதலீடு போன்றவற்றை நடத்தும் இணையக் குற்றவாளிகள் தனியே மையங்களாக உருவெடுத்துள்ளனர்.

அவர்கள், பாதுகாப்பான வட்டத்துக்குள் இருந்து செயல்படுகின்றனர். இதில் பலர் விருப்பத்துடனும், கடத்தப்பட்டு கட்டாயத்துடனும் மோசடியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், உலகெங்கும் பலரை இணைய வழியில் ஏமாற்றிப் பணம் பறிக்கின்றனர்.

Advertisement

Advertisement

ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு சார்ந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் ரூ. 7 லட்சம் கோடி முதல் ரூ. 11 லட்சம் கோடி வரை இழந்துள்ளனர்.

2023-ல் கணிக்கப்பட்ட ரூ. 1.7 லட்சம் கோடி முதல் ரூ. 3 லட்சம் கோடி வரையிலான தொகையைவிட தற்போதைய இழப்பு மிக அதிகமானது. இதன்மூலம், இணையக் குற்றங்களின் பொருளாதார பின்னணி அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

ஆசிய நாடுகளில் சீனா, தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகள் இணைய மோசடிகளால் 2 ஆண்டுகளில் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. ஒவ்வொரு நாடும் பல பில்லியன் டாலர்களை இதில் இழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய பரவல்

தென்கிழக்கு ஆசியாவில் இணைய மோசடிக் கும்பல்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. முதலில் சீன மொழி பேசுபவர்களை குறிவைத்து செயல்பட்ட கும்பல்கள், பின்னர் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி உலகம் முழுவதுமுள்ள மக்களைக் குறிவைத்து மோசடி செய்கின்றனர்.

உலகம் முழுவதும் ஆட்களை நியமித்தும், கடத்தி வந்தும் இந்த வேலைக்கு ஆட்களைப் பயன்படுத்துகின்றனர். தென் சீனாவின் மெகாங் பிராந்தியத்தில் உள்ள மோசடி மையங்களில், குறைந்தது 80 நாடுககளைச் சேர்ந்த நபர்கள் பணிபுரிவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழிபெயர்ப்புக் கருவிகள் மக்களிடையே செல்வதை எளிதாக்கியுள்ளன. ஆனாலும், ஆங்கிலம் தவிர ஜெர்மன், போலிஷ், டச்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், பிரெஞ்சு போன்ற மொழிகளைப் பேசும் பணியாளர்களுக்கான விளம்பரங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிடுகின்றனர்.

அதிகாரிகள் இந்த மோசடி மையங்களில் சோதனை நடத்துகையில் பிடிபடும் வெளிநாட்டினர், அங்கு கற்றுக்கொண்ட திறன்களுடன் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி அங்கு குற்ற வலையமைப்பை விரிவுபடுத்துகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, இத்தகைய கும்பல்களுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், அந்தக் குழுக்கள் பல்வேறு இடங்களிலிருந்து செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குற்றவியல் அமைப்புகள்

கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரியதாக உருமாற்றம் அடைந்துள்ள தென்கிழக்கு ஆசியாவின் பரந்த குற்றவியல் சூழல் அமைப்பின் ஒரு பகுதி மட்டுமே இந்த மோசடி கும்பல் மையங்கள் என ஐநா தெரிவித்துள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், ரியல் எஸ்டேட் முதலீடு போன்றவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளது. இவை, ஏற்கனவே உள்ள வர்த்தக வழிமுறைகள் மூலம் செயல்பட்டு, கிரிப்டோகரன்சிகளுக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றன. அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்த குற்றவாளிகள் சர்வதேச அளவில் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து, குற்றம் சார்ந்த மிகப்பெரிய பொருளாதார நகர்வை நோக்கிச் செல்கின்றனர் என அறிக்கை தெரிவிக்கிறது.

இது சட்ட அமலாக்கத்திற்கு சவால் விடுவதுடன், அந்தப் பகுதிகளின் நிர்வாகம் மற்றும் பொருளாதார, சமூக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.

summary

Regarding the losses caused by online fraud in the Asia-Pacific region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments