முகப்பு
தமிழ்நாடு

தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜிநாமா கடிதங்களை ரத்துசெய்யக் கோரி வழக்கு!

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ரத்துசெய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 3:44 pm IST
மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா.
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்று பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், 108 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின.

திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், தவெக ஆட்சியமைத்தது.

Advertisement

Advertisement

கடந்த மே 13 ஆம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு, தவெக-வில் இணைந்தனர்.

அவர்களின் ராஜிநாமா கடிதங்களை அன்றைய தினமே அவைத்தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில் இதுகுறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த போது, மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தகுதிநீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள போது, அதனைத் தவிர்க்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததை ஏற்க முடியுமா? என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள போது, ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. கட்சித்தாவல், ராஜிநாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது” எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூன்று எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனுக்களை விசாரித்து, முடிவெடுக்க பேரவைத்தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Case filed seeking to annul the resignation letters of AIADMK MLAs who joined TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.