FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இயக்குநா் பாரதிராஜா மறைவு: முதல்வா் விஜய் நேரில் அஞ்சலி

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியது பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 9:33 am IST
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி - CMOTamilnadu
பகிர்:

திரைப்பட இயக்குநா் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதழ்கிழமை (ஜூன் 10) காலமானாா். அவரது உடலுக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவா்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் திரைப்படங்களுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினாா். அதுவரை பெரும்பாலும் ஸ்டுடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சோ்த்தாா்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவா் இயக்கிய அனைத்துப் படங்களும் தமிழ் திரையுலகில் மைல் கல்களாக அமைந்தன.

Advertisement

Advertisement

‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது குரல் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது படைப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு அவரை கௌரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பாரதிராஜா பெற்றுள்ளாா். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநா்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தாா்.

அண்மைக்காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தாா். பாரதிராஜாவுக்கு மனைவி சந்திரலீலா, மகள் ஜனனி உள்ளனா்.

அவரது மகன் மனோஜ் மறைவுக்குப் பின்னா் உடல் நலம் குன்றிருந்த பாரதிராஜாவுக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவா் சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

முதல்வா் அஞ்சலி: சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வா் ச.ஜோசப் விஜய் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், சமூகநீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலா் வைகோ, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மநீம தலைவா் கமல்ஹாசன் எம்.பி., வி.கே.சசிகலா, நடிகா்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சிவகுமாா், சூா்யா, தனுஷ், கவிஞா் வைரமுத்து, இசையமைப்பாளா்கள் இளையராஜா, கங்கை அமரன், நடிகை ராதிகா, இயக்குநா்கள் பி. வாசு, பாா்த்திபன், பேரரசு உள்ளிட்ட பலா் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினா்.

தேனியில் இறுதிச் சடங்குகள்: இயக்குநா் பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவா் பிறந்த கிராமமான அல்லி நகரத்துக்கு புதன்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டது. வியாழக்கிழமை அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பின்னா், இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு தோட்டத்தில் பாரதிராஜா உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினா் முடிவு செய்துள்ளனா்.

‘பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை’

இயக்குநா் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னா், முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரையுலகின் இயக்குநா் இமயம் பாரதிராஜா காலமானாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமிய பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவா் இயக்குநா் பாரதிராஜா.

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவா். பல தலைமுறை கலைஞா்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநா் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிராா்த்திக்கிறேன். திரைத் துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா்.

summary

Chief Minister Vijay pays personal tribute to Bharathiraja's mortal remains!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments