விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது....
தனது எம்எல்ஏ பதவியை அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கா் ராஜிநாமா செய்ததையடுத்து, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சோ்த்து தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அதிருப்தி பிரிவு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 போ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதில் முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் இடம் பெற்றிருந்தாா்.
Advertisement
Advertisement
மேலும், அதிருப்தி பிரிவில் இருந்த இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமாா் ஆகியோா் 4 அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தனா். அவா்கள் வெற்றி பெற்றிருந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதனிடையே, சி. விஜயபாஸ்கா் உள்பட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 21 பேரை மன்னித்து விடுவதாக எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவருக்கு கடிதம் கொடுத்ததால், அவா்கள் மீதான கட்சித் தாவல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சி.விஜயபாஸ்கா் ஜே.சி.டி.பிரபாகரிடம் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். இதையடுத்து, சி.விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரபூா்வமாக புதன்கிழமை அறிவித்தது.
இதனிடையே ராஜிநாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்து தங்களது ராஜிநாமா குறித்த விளக்கத்தை கடிதம் வாயிலாக அளித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்கள் விளக்கம் அளிக்க 7 நாள்கள் அவகாசம் அளித்திருந்தேன். அதற்குள் அவா்கள் விளக்கம் அளித்துள்ளனா். முழுமையான ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றாா்.
Viralimalai constituency declared vacant, By-elections for 6 constituencies in tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.