மேக்கேதாட்டு அணைக்கு பதிலாக மாற்று யோசனை என்ன? தமிமுன் அன்சாரி விளக்கம்
கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீர்மானத்தின்போது தமிமுன் அன்சாரி பேசியதாவது, "அரசியல் அணுகுமுறைகள், கருத்து வேறுபாடுகளைக் கடந்து, காவிரி உரிமைக்காக இந்த அவையில் இருக்கும் நாம் எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்தக் கூடிய கடமை இப்போது இருக்கிறது.
உலகெங்கும் தண்ணீருக்கான போராட்டங்கள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக வலுப்பெற்று வருகிறது. இந்திய பல்வேறு இனம், மொழி, பிராந்தியங்களை கொண்ட ஒரு துணைக் கண்டமாக இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
நாட்டில் நதிநீர்ப் பிரச்னை வரும்போதெல்லாம், மத்திய அரசு தலையிட்டு, தீர்ப்பை வழங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நதிநீர்ப் பிரச்னையின் காரணமாக பிளவு ஏற்பட்டு விடக் கூடாது என்ற அச்ச உணர்வு ஜனநாயக சக்திகள் எல்லோருக்கும் இருக்கிறது.
வட ஆப்பிரிக்காவில் 11 நாடுகளுக்கு பயனளிக்கும் நைல் நதி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டால், அதனைத் தீர்ப்பதற்காக நைல் பேசின் இன்சியேட்டிவ் என்ற ஒரு நிர்வாக அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைக் கடந்து செல்லும் நதியை பாதுகாப்பதற்கு ஒரு கூட்டுக் குழு ஏற்படுத்தப்படுமாயின், ஒரே நாட்டில் பாயும் நதிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தப் பிரச்னை கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சார்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இதில் 4 மாநில மக்களும் பயனடைகின்றனர்.
இந்த நிலையில், மேக்கேதாட்டு அணையைக் கட்ட மத்திய அமைச்சர் பாட்டீலை கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சந்தித்துள்ளார். இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இதனை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் அமைக்கப்பட்ட அமைப்புதான் காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி, காவிரியின் குறுக்கே எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுகிறபோது, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
மேக்கேதாட்டு அணைக்கு மாற்று யோசனையாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள ராசிமணலில் அணை கட்டலாம் என முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். இங்கே அணை கட்டும்போது, இரு மாநில மக்களும் சர்ச்சையின்றி நீரைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஏனெனில், அணையின் இடதுபுறம் தமிழகத்தின் பக்கமும், வலதுபுறம் கர்நாடகத்தின் பக்கமும் இருக்கிறது. இரு மாநில விவசாயிகளும் அவரவர் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்காகத்தான் முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார்" என்று தெரிவித்தார்.
Alternative proposal to the Mekedatu dam: MJK Leader Thamimun Ansari explains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.