மாதவிடாய் அவமானமல்ல! மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் பெண்ணின் குரல்!
மாதவிடாய் பற்றிக் கிராமப்புற பள்ளி மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் விஜயராணி மீனாட்சி.
எம். ஹரிணி
இன்றைய நவீன யுகத்திலும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் வளரிளம் பருவ சிறுமிகளுக்கு இன்னமும் மாதவிடாய் என்பது அச்சம், அவமானம் அல்லது கேலிக்குரியதாகவே இருந்து வருகின்றது.
பல்வேறு முணுமுணுப்புகள், மறைத்துப் பயன்படுத்தப்படும் துணிகள், வகுப்புத் தோழர்களின் கேலிப் பேச்சுகள் என மாதவிடாய் பற்றி முழுதாகப் புரிந்துகொள்ளும் முன்னரே அது தரும் அனுபவங்கள் மோசமான வடுக்களாகப் பெண்களின் மனதில் பதிகின்றன.
Advertisement
Advertisement
மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேச பலரும் தயங்கும் நிலையில் அதனை உடைக்கும் குரலாக ராஜபாளையத்தைச் சேர்ந்த விஜயராணி மீனாட்சி என்ற 51 வயதுப் பெண் பல ஊர்களுக்குச் சென்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சிறுவயதில் வாசிப்புப் பழக்கமாகத் தொடங்கி, இன்று இளம் சிறார்களின் மனதில் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கைகளை அகற்றும் விதமாக மாதவிடாய், பாலினப் பாகுபாடு போன்ற விஷயங்களைப் பற்றி தொடர்ந்து மாணவர்களிடையே பேசும் சக்தி வாய்ந்த குரலாக மாறியுள்ளார்.
விஜயராணி மீனாட்சி 1994 ஆம் ஆண்டு ஹிந்தி இலக்கியத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் எழுத்தர் பணிக்குத் தேர்வானார். ஆனால், வேறு மாநிலத்திற்குச் சென்று பணிபுரிய அவரது பெற்றோர் அனுமதிக்காததால் அவரது கனவு குறுகிய காலத்துடன் நிறைவுற்றது.
அதற்கு, இரு ஆண்டுகள் கழித்து பல தடைகளுக்குப் பிறகு அவரது காதலரை மணமுடித்தார் விஜயராணி. யாரையும் சார்ந்து இருக்காமல் வாழ முடிவெடுத்து வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் தொடங்கிய அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது வாசிப்புப் பழக்கத்தையும் மீட்டெடுத்தார். தொடர்ந்து, சிறுகதைகள் எழுதினார்.
காலப்போக்கில், புத்தகங்கள் மீதான அவரது ஆர்வம் மேலும் அதிகரித்து புத்தக விமர்சனங்கள் செய்வது மற்றும் புத்தகங்கள் பற்றி தமிழ் இலக்கிய மன்றங்களில் பேசுவது போன்றவற்றில் ஈடுபாடு காட்டினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் பரவலான போது அருகாமை வீடுகளில் உள்ள சிறார்கள் பெரும்பகுதி நேரத்தை மொபைல் போனில் கழிப்பதையும், கேம் விளையாடுவதையும் அவர் கவனித்தார்.
குழந்தைகளின் மொபைல் போன் பயன்பாடு அங்குள்ள பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்தும் விதமாக மாறிவருவதைக் கண்ட விஜயராணி அதுபற்றி அந்தப் பகுதி பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் பேசத் தொடங்கினார்.
அதிக நேரம் போன் திரையைப் பார்ப்பதால் ஏற்படும் பிரச்னைகள், தேவைக்கேற்ப மொபைல் போனை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான ஆரோக்கியமான மாற்று வழிகள் என பல விஷயங்கள் பற்றி தொடர்ந்து கலந்துரையாடினார்.
இது அப்பகுதியினரிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது ஆலோசனைகளால் தங்களது குழந்தைகள் மாற்றமடைவதைக் கண்ட பல பெற்றோர்கள் பள்ளிகளில் மாணவர்களிடையே விஜயராணியைப் பேச அழைக்குமாறு பரிந்துரை செய்யத் தொடங்கினர்.
இதன்மூலம், தொடர்ந்து மாணவர்களிடையே பேசி வரும் அவர், சிறுவர்கள் உடனான உரையாடல்கள் பல ஆழமான சமூக பிரச்னைகளை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்.
பல நடுநிலைப் பள்ளிகளில் சிறுமிகள் மாதவிடாய் அடையும் போது அதுசார்ந்த மூடநம்பிக்கைகள் இன்றும் உலவுவதாகக் கூறும் அவர், இந்தக் காலத்திலும் பல கிராமங்களில் மாதவிடாய் கறை படிந்த துணிகளை மறைவான பகுதியில் காயவைக்கும் பழக்கம் இருப்பதைக் குறிப்பிடுகிறார். மேலும், அது நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்பதையும் விஜயராணி சுட்டிக்காட்டுகிறார்.
மாதவிடாய் காலங்களில் சிறுமிகளைக் கேலி செய்யும் சிறுவர்கள் பற்றி குறிப்பிடுகையில் “ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாதவிடாய் நாள்களில் வலி காரணமாக வகுப்பறையின் கடைசி பெஞ்ச்சில் ஓய்வெடுத்து வந்தார். அந்த நாள்களைத் தொடர்ந்து கவனித்து வந்த மாணவர்கள் சிலர் அந்த மாணவியைக் கேலி செய்யத் தொடங்கினர். இதனால், அம்மாணவி அவமானம் தாங்காமல் மாதவிடாய் நாள்களில் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிட்டார்” என்று விஜயராணி கூறுகிறார்.
இதுபோன்ற பிரச்னைகளே பள்ளி மாணவர்களிடையே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தூண்டியதாக அவர் குறிப்பிடுகிறார்.
“மாணவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சக மனிதர்கள் மீதான பரிவுணர்வை ஊக்குவித்து, காலகாலமாக நிலவிவரும் கட்டுக்கதைகளைத் தகர்ப்பதையே எனது நோக்கமாகக் கொண்டுள்ளேன்” என விஜயராணி கூறுகிறார்.
வரும் காலங்களில் மேலும் பல கிராமப்புறப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடி, பாலினப் பாகுபாடுகளைக் களையவும், மாதவிடாய் பற்றி நிலவும் மௌனத்தைக் கலைக்கவும், மாணவர்களிடையே உள்ள பிற பாகுபாடுகளைக் கவனப்படுத்தவும் நம்பிக்கையான குரலாகத் தொடர்ந்து பயணிக்கவுள்ளார் விஜயராணி மீனாட்சி!
தமிழில் - வ. ஜெகதீஸ்
Menstruation is Not a Shame! A Woman's Voice Shattering Superstitions!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.