தலைமைச் செயலகத்தைச் சுற்றிப்பாா்த்த முதல்வா்
தலைமைச் செயலக வளாகத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று பேட்டரி கார் மூலம் சுற்றிப் பார்த்தார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று பேட்டரி கார் மூலம் பார்வையிட்டார். பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களையும் முதல்வர் பார்த்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய் கோட் அணியாமல் வெள்ளை சட்டையுடன் பேட்டரி காரில் ஏறினார். இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் முதல்வர் விஜ்ய்யைப் பார்க்க கோட்டைப் பகுதியில் திரண்டனர்.
பத்து நாள்களுக்கும் மேலாக தலைமைச் செயலகம் வந்தாலும், முழுமையாக அவர் அந்த வளாகத்தைப் பார்வையிடவில்லை என்பதால், இன்று பேட்டரி கார் மூலம் தலைமைச் செயலகத்தைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார். இந்த தகவல் அறிந்து, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் முதல்வரைக் காண குவிந்தனர்.
பல்வேறு சொந்தப் பணிகளுக்காக இன்று தலைமைச் செயலகம் வந்திருந்த மக்கள், முதல்வர் வெளியே வருவதைப் பார்த்ததும் அவரைப் பார்க்க, அவர் வரும் வழியில் மக்கள் குவிந்தனர். இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் 40க்கும் மேற்பட்ட துறைகளின் தலைமை அலுவலகம் இங்குதான் செயல்படுகிறது என்பதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
கோட்டை காவல்நிலையம், உணவகம், அஞ்சல் நிலையம் என பல வசதிகள் கொண்டதாக தலைமைச் செயலக வளாகம் அமைந்துள்ளது. இதற்கென பிரத்யேகமாக ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் உள்ளன.
இந்த தலைமைச் செயலகத்தை சுற்றி, அகழி தோண்டப்பட்டு அதில் முதலைகள் போடப்பட்டிருந்தது பற்றியும், இங்கு தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பற்றியும் உயர் அதிகாரிகள் முதல்வர் விஜய்க்கு விளக்கினார்.
Tamil Nadu Chief Minister Joseph Vijay toured the Secretariat complex in a battery car today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.