மை அழிவதற்குள் 5 தொகுதிகள் காலி! ஒரு தொகுதியில் தேர்தல் நடத்த ஆன செலவு எவ்வளவு?
5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தொகுதியில் தேர்தல் நடத்த ஆன செலவு எவ்வளவு என்பது பற்றி..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டு மே 4-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் வைத்த மை, இன்னும் சிலரது விரலில் இருந்து முழுமையாக அழியாத நிலையில் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4 பேர் ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்ததால் திருச்சி கிழக்கு தொகுதி உள்பட 5 தொகுதிகள் காலியாக உள்ளன.
தவெகவுக்கு ஆதரவளித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த 25 எம்எல்ஏக்கள் அணியைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயகுமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர்.
Advertisement
Advertisement
நல்வாய்ப்பாக, அதிமுகவிலிருந்து விலகி, சிவி சண்முகம் தரப்பாக மாறிய எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து விட்டார்கள். இல்லையென்றால்,கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் 21 தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்கும்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதனால், திருச்சி கிழக்குத் தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டார்கள்.
இதனால், மே 26ஆம் தேதி மாலை நிலவரப்படி, தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் காலியானதால், ஏற்கனவே இங்கு நடந்த தேர்தலுக்கான செலவு வீண். மேலும் மறுதேர்தல் நடத்த அரசுப் பணம் செலவிடப்பட வேண்டும்.
அதாவது, நடந்து முடிந்த பேரவைத் தேர்தலுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1302 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்தம் 234 தொகுதிகளுக்கு என்று எடுத்துக் கொண்டால், ஒரு தொகுதிக்கு ரூ.5.5 கோடி செலவாகும். இந்த செலவினம் என்பது, வாக்குச்சாவடிக் கட்டடம், உள்கட்டமைப்புச் செலவு, மத்திய துணை ராணுவப் படைகளை பணியமர்த்துவதற்கான செலவு, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் பயணப்படிகள், தேர்தல் அதிகாரிகள் போக்குவரத்து செலவு, வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்து கொண்டு சென்று, பாதுகாக்க ஆகும் செலவு என அனைத்தும் உள்ளடங்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான செலவு என்றால் மாநில அரசுதான் ஏற்கும். எனவே அது அரசு செய்யும் செலவு என்றால், ஒரு வேட்பாளர் என்பவர், ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். எனவே, ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெற்றால் பல கோடிகள் அங்கே செலவாகிறது. இவ்வாறு பல கோடிகளில் செலவிட்டு ஒரு எம்எல்ஏ தேர்வாகும்போது, அவர்கள் ஒரு மாதம்கூட பதவியில் நீடிக்காமல், எந்தவொரு பொது நலனும் இல்லாமல், சுயநலத்துக்காக அவர்கள் பதவியை ஒரே ஒரு கடிதத்தில் ராஜிநாமா செய்துவிட்டுப் போகும்போது, அதனால், மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அவர்களது வரிப்பணமும் வீணாகிறதே. இந்த செயலுக்கு யார்தான் பொறுப்பேற்பது.. இதுபோன்றவர்களைத் தேர்வு செய்த மக்கள்தான் இவர்களது செயலுக்கும், செலவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை இப்போதைக்கு மாற்றுவதற்கில்லை.
ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்எல்ஏ, தனது பதவியை ராஜிநாமா செய்தால், அந்த தொகுதிக்கான தேர்தல் செலவை, அவரே ஏற்க வேண்டும் அல்லது அவர் அடுத்து சில ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.