கோவை சிறுமி பாலியல் கொலை: கார்த்திக், மோகன்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டம்!
கோவை சிறுமி பாலியல் கொலையில் கைதான கார்த்திக், மோகன்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
கோவை: கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்திக், மோகன்ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்து ஐ.ஜி. ரம்யா பாரதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய கோவை, சூலூர் பள்ளபாளையம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து உள்ளார்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதியின் அதிரடிப் பரிந்துரையின் பேரில் இந்த சட்டம் போடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தில், 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, தென்னைத் தோட்டத்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (30) ஆகிய இருவரைச் சூலூர் போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இதில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற முக்கியக் குற்றவாளி கார்த்திக், மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு குற்றவாளி மோகன்குமார் நீதிமன்றக் காவலில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ (POCSO) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த சமூக விரோதிகள் இருவரும் எளிதில் ஜாமீனில் (Bail) வெளியே வர முடியாதபடி ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் "குண்டர் தடுப்புச் சட்டம்" பாய்ச்ச காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பரிந்துரையின் பேரில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IG) ரம்யா பாரதி, IPS இவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப் பிரத்யேகப் பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினார்.இந்த பரிந்துரைக் கடிதத்தை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் (Collector) பவன் குமார், IAS, குற்றவாளிகள் இருவரின் கொடூரச் செயலைத் தடுக்கும் பொருட்டும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க நள்ளிரவில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் நகல், கோவை மத்தியச் சிறை நிர்வாகம் மற்றும் மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகளிடம் போலீஸார் மூலம் முறைப்படி வழங்கப்பட உள்ளது.
துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்தது மட்டுமன்றி, அடுத்த சில தினங்களிலேயே அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தையும் போட்ட ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் கோவை மாவட்ட காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையைப் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.