FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளலாம்: உயர் நீதிமன்றம்

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது குறித்து...

உயர் நீதிமன்றம்
பகிர்:

தமிழகம் முழுவதும் 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவுகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்த நடைமுறையை மாற்றி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குப்பைகளை கையாளும் பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்தப் பணிகளில் 616.28 கோடி மதிப்பீட்டில், 22 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடக்கழிவுகளைக் கையாளும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை காரணமாக, திடக்கழிவுகளை கையாளும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, அரசாணைக்கு தடை விதித்து, கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது என்பது மாநில அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றியே இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், பணியாளர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்டவை நேரடியாகவே வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 147 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மைப் பணிகளை ஸ்தம்பிக்க செய்யும் வகையில் தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால், பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோய் அபாயங்கள் உள்ளதாகவும் கூறி, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

summary

Local bodies themselves can carry out solid waste management operations High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.