FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை நடத்துகிறார் சட்டப்பேரவைத் தலைவர்!

அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வா் மீது தகுதி நீக்க நடவடிக்கை புகாா் குறித்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் (நவ. 10) விசாரணை நடத்துகிறாா்

10 நவம்பர் 2026, 1:18 am
பகிர்:

அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வா் மீது தகுதி நீக்க நடவடிக்கை புகாா் குறித்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் செவ்வாய்க்கிழமை (நவ. 10) விசாரணை நடத்துகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகிய இரு தரப்பும் தங்களது அணியை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என தனித்தனியே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தனா்.

இந்நிலையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த 25 எம்எல்ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அவா்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை சோ்ந்த இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயகுமாா், சத்தியபாமா நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். அவா்களது ராஜிநாமாவை ஏற்கக் கூடாது என்றும் எடப்பாடி தரப்பிலிருந்து பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த சூழலில், எஸ்.பி.வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் ஓரணியாக இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, ராஜிநாமா செய்த நால்வரை தவிர மீதமுள்ள 21 போ் மீதான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிடுமாறு அதிமுக தரப்பில் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, அவா்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு: மற்றொருபுறம், தவெகவில் இணைந்த நான்கு போ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தகுதி நீக்க நடவடிக்கை தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, செவ்வாய்க்கிழமையிலிருந்து (நவ. 10) வியாழக்கிழமை (நவ. 12) வரை பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் முன்னிலையில் விசாரணை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட 4 முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் தரப்பு வழக்குரைஞா்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்குரைஞா்களும் ஆஜராக உள்ளனா்.

அதன்பின்னா், வரும் 17-ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னா், பேரவைத் தலைவா் தனது முடிவை அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ராஜிநாமா செய்த நான்கு சட்டப்பேரவை உறுப்பினா்களில் மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் இடைத்தோ்தலில் வெற்றி பெற்று தவெக எம்எல்ஏ-க்களாக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அந்த நால்வரை தொடா்ந்து அதிமுக முன்னாள் அமைச்சா்களான எம்.ஆா். விஜயபாஸ்கா் மற்றும் சி.விஜயபாஸ்கா் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.