தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்! முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்!!
தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள் சிக்கிவரும் நிலையில் முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்...
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த பெண் எம்எல்ஏக்கள் முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்துவிட்டு ஒவ்வொருவராகப் புறப்பட்டனர்.
தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்திருக்கும் எம்எல்ஏக்களை தமிழக முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் தனித்தனியாக சந்தித்துப் பேசி, தொகுதியில் நடந்த பணிகள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்து வருவதாகவும், முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தவெக பெண் எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசிய நிலையில், அவர்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மற்ற எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியிருப்பார்களா? அவர்களும் சந்திப்புக்குப் பின் புறப்பட்டுச் செல்வார்களா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த ஆறு மாத காலத்தில், தவெக எம்எல்ஏக்களின் பணிகளைக் கேட்டறியவும், எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது போன்றவற்றாலும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று கூட்டம் நடைபெற உள்ள மாமல்லபுரம் தனியார் விடுதி 3 நாள்களுக்கு தவெக சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.
தவெக எம்எல்ஏக்கள் இந்த விடுதியில் மூன்று நாள்கள் தங்க வைக்கப்படலாம் என்று கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
முதலில், இன்று காலை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டம், பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மூன்று மணிக்கு ஒவ்வொரு எம்எல்ஏக்களாக விடுதிக்கு வந்த நிலையில், முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.