தமிழகத்தின் 3 கடற்கரைகளுக்கு முதன்முறையாக நீலக் கொடி அங்கீகாரம்! சாதனை படைத்த கோவளம்!!
தமிழகத்தின் மூன்று கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்து...
தமிழகத்தின் மூன்று கடற்கரைகளுக்கு முதன்முறையாக சர்வதேச நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில், கோவளம் கடற்கரை தொடர்ந்து ஆறாவது முறையாக அங்கீகாரத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு, கடலோரச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தகு சுற்றுலா மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (Foundation for Environmental Education – FEE), கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி கடற்கரை (Silver Beach), நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் கடற்கரை ஆகிய மூன்று கடற்கரைகளுக்கு 2026-2027 -ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சர்வதேச நீலக்கொடி (Blue Flag) அங்கீகாரத்தினை முதன்முறையாக வழங்கியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை தனது நீலக்கொடி அங்கீகாரத்தைத் தொடர்ந்து ஆறாவது முறையாகப் புதுப்பித்துத் தக்கவைத்துள்ளது.
நீலக்கொடி அங்கீகாரம் என்பது உலகளவில் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரச் சான்றாகும். கடற்கரைகளின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, குளிப்பதற்கான கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட 33 சர்வதேசத் தரநிலைகளின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்தத் தரநிலைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றனவா என்பதை தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீட்டுக் குழுக்கள் ஆய்வு செய்த பின்னரே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு, ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.
கோவளம் கடற்கரை 2021-ஆம் ஆண்டில் முதன்முறையாக நீலக்கொடி அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் கடற்கரையாகத் திகழ்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்து, 2026-ஆம் ஆண்டிலும் தனது நீலக்கொடி அங்கீகாரத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த 2025–26ஆம் ஆண்டில் மட்டும் கோவளம் கடற்கரைக்கு சுமார் 5.5 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரங்களின் மூலம், தமிழ்நாட்டில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) கீழ் இந்த நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டும் துறையாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை (DoECC) செயல்பட்டு வருகிறது. சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப கடற்கரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கடலோரச் சூழலியலைப் பாதுகாத்தல், பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளில் பார்வையாளர்களுக்காக நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், உடைமாற்றும் அறைகள், கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள், உயிர்காக்கும் காவலர்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம் பார்வையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தற்போது நிலவி வரும் வடகிழக்குப் பருவமழைக் காலம் நிறைவடைந்த பின்னர், ஜனவரி 2027 முதல் தமிழ்நாட்டில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளுக்கான 2026–27ஆம் ஆண்டுப் பருவம் முறையாகத் தொடங்க உள்ளது.
இந்தச் சாதனை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மிக முக்கியமாக, உள்ளூர் சமூகங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் பங்களிப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளது. கடற்கரைகளின் தூய்மையைப் பராமரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடற்கரை மேலாண்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு அரசு, கடலோரச் சூழலியலைப் பாதுகாத்து, சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான, தூய்மையான மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த கடற்கரைகளை உருவாக்குவதற்கும், நிலையான கடலோர மேலாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.