FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது பிரச்னைகளுக்குத் தீர்வாகிவிடுமா? அண்ணாமலை கேள்வி!

மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது பிரச்னைகளுக்குத் தீர்வாகிவிடுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

34 வினாடிகள் முன்பு
'வி தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை - கோப்புப்படம்.
பகிர்:

மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது பிரச்னைகளுக்குத் தீர்வாகிவிடுமா? என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை (18) கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத் தலைவராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்களின் ராஜிநாமா கடந்த 2026 ஜூன் 28-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த மிக முக்கியமான பதவியை மீண்டும் நிரப்புவதற்கான அரசாணை, சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 9-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இன்றுவரை புதிய துணைத் தலைவர் நியமிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

தமிழ்நாட்டின் நீராதார உரிமைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பொறுப்பான பதவியை நிரப்புவதிலேயே இத்தகைய காலதாமதம் ஏற்படுவது அரசின் நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இது சாதாரணமான ஒரு நிர்வாகப் பதவி அல்ல, தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பு.

ஒருபுறம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மறுபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்ட விவகாரமும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவாலாக நீடிக்கிறது. இத்தனை முக்கியமான பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கும்போது, அவற்றைக் கையாள வேண்டிய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் மிக முக்கியமான துணைத் தலைவர் பதவி காலியாக இருப்பது எவ்வளவு பெரிய நிர்வாகக் குறைபாடு?

தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் சொந்த நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனங்களை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அமைச்சரைச் சந்தித்து மனு அளிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும் என்று தவெக அரசு நினைக்கிறதா?

விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் நீர் உரிமையும் தொடர்புடைய இவ்வளவு முக்கியமான விவகாரங்களில் தவெக அரசின் இத்தகைய நிர்வாகத் தாமதமும் பொறுப்பின்மையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

summary

Will meeting a Union Minister and submitting a petition actually provide a solution to the problems? this question was posed on Wednesday (18) by Annamalai, leader of 'We the Leaders'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.