திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்? முதல்வர் மீது அண்ணாமலை காட்டம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க அண்ணாமலை வலியுறுத்தியது குறித்து...
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் விஜய் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை திருநாளில் தீபமேற்றுவதற்கு நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது, "திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், இரு நீதிபதிகள் அமர்வும் மனுதாரருக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தனர். அப்படியிருக்கையில், எதன் அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் எனத் தெரியவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் தவெக அரசு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
Advertisement
Advertisement
உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு திமுக ஆட்சியில் நடந்த விவாதமும், தற்போதைய தவெக அரசின் விவாதமும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. தீபத்தூணை கடந்தாண்டில் வடதுருவம் என்றனர்; இந்தாண்டில் தென் துருவம் என்கின்றனர். கடந்தாண்டில் பௌர்ணமி என்றனர், இந்தாண்டில் அமாவாசை என்கின்றனர்.
தீபத் தூணை கடந்தாண்டில் ஜெயின் துறவிகளின் தூண் என்றனர். இந்தாண்டில் பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்ட மைல்கல் என்கின்றனர்.
கடந்த திமுக அரசுக்கும் தற்போதைய தவெக அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. வெளி மாநிலங்களில் உள்ள கோயில்களுக்குச் செல்ல வேண்டும் என்று முதல்வருக்கு இருக்கும் ஆர்வம், மதுரையில் இருக்கும் முருக பக்தர்களுக்கு இருக்கக் கூடாதா?
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் விவகாரத்தில் இங்கு யாரும் மதவாத செயலில் ஈடுபடவில்லை. அவர்களின் உரிமையைத்தான் கேட்கின்றனர். கடந்தாண்டில் எந்த இஸ்லாமியரும் பிரச்னை செய்யவில்லை.
தீர்ப்பு வந்தவுடன் அறநிலையத் துறை முதலில் மேல் முறையீடு செய்தது, பின்னர் இரண்டாவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் மேல் முறையீடு செய்தனர். தொடர்ந்து, ஜமா-அத்தை அழைத்து மேல் முறையீடு செய்ய வைத்தனர்.
அனைத்து மதங்களையும் தவெக அரசும் திமுக அரசும் சமமாக மதிப்பது கிடையாது.
மாற்றம் நடக்கும் என முதல்வர் விஜய் கூறினார். என்ன வெங்காய மாற்றம் செய்தார் அவர்?
திராவிட கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவதாகக் கூறி, எந்த அடிப்படை மாற்றமும் இல்லை என 35 சதவிகித தமிழக மக்கள் மாற்றி வாக்களித்தனர். 1.5 கோடி பேருக்கு மேல் ஒரு மாற்றம் கொடுத்தனர்.
அப்படியிருக்கையில் ஆட்சியில் அந்த மாற்றத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா? திமுக சொன்னதையே மாற்றி சொல்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெகவின் போக்கு எனக்கு வருத்தம் அளிப்பதாய் இருக்கிறது.
ஆகையால், இப்போதாவது முதல்வர் விஜய் பேசியாக வேண்டும். இந்தக் கொள்கையில் இதுதான் எங்கள் முடிவு, அரசின் முடிவு என ஏதேனும் முதல்வர் பேச வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்தப் பக்கமா அல்லது அந்தப் பக்கமா என்பதை அவர் சொல்ல வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பின்பற்றுங்கள், நிறைவேற்றுங்கள். இதற்கு தடைக்கல்லாக அரசு நிற்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.