மீனவர்கள் நாள்! கடல் ஆம்புலன்ஸ், காப்பீட்டுத் தொகை உயர்வு: அமைச்சர் ஸ்ரீநாத்
மீன்வளத் துறையில் பல்வேறு பரிந்துரைகளை முதல்வர் வழங்கியிருப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் கூறியது குறித்து...

மீன்வளத் துறையில் பல்வேறு பரிந்துரைகளை முதல்வர் வழங்கியிருப்பதாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
உலக மீனவர்கள் நாளில் மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "என் அன்பான மீனவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது, மீனவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பங்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு என பல்வேறு பரிந்துரைகளை முதல்வர் வழங்கி உள்ளார். அதனையேற்று, மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை நம் மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இலக்காக வைத்து வடிவமைத்து வருகிறது.
Advertisement
Advertisement
குறிப்பாக, மீனவர்களின் இன்னுயிர் காக்க, மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும், மேலும் தற்போது ரூ. 5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிப்பதுடன், அரசு விதிகளையும் புயல் எச்சரிக்கையையும் பின்பற்றி மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மீன்வளச் செல்வம் கிடைத்திட உறுதியேற்போம்.
மீனவர்களின் இடர்பாடுகளில் என்றும் துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முதல்வர் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.
மீனவர் நலன் காப்போம்! கடல் வளம் பாதுகாப்போம்! வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.