முகப்பு

இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை தொடக்கம்! தேர்தலில் போட்டியா?

நெல்லையில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ தொடக்கம்

56 வினாடிகள் முன்பு
இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை தொடக்கம்! தேர்தலில் போட்டியா?
‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ இலச்சினை - படம்: தினமணி
பகிர்:

நடிகை த்ரிஷாவின் பெயரில் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான இலச்சினை வெளியீடு மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (நவ. 23) நடைபெற்றது.

தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் இந்தப் பேரவையைத் தொடங்கியுள்ளார். திருநெல்வேலியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சாமி திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்த கதாபாத்திரம், தைரியமும் துணிச்சலும் நிறைந்த திருநெல்வேலி பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் அவரது நடிப்பு, ராஜகோபாலுக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷாவின் ரசிகராக இருந்து வந்த அவர், அவரது பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கி, மக்கள் நலப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

ரசிகர் மன்றமாக மட்டுமின்றி, தொண்டு மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு நலப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, இலச்சினையில் நடிகை திரிஷாவின் புகைப்படத்துடன் ‘பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!!’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

தொழிலதிபர் ராஜகோபால் ஏற்கெனவே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் தொடர்பில் இருந்து வருகிறார்.

நடிகை த்ரிஷாவின் பெயரில் நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேரவை, இனிவரும் காலங்களில் மக்கள் நலத்திட்டங்கள், இணையதள அமைப்புகள் உள்ளிட்டவைகளை உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது அரசியல் சார்பு இயக்கம் கிடையாது, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்டவைகளை எங்களது அமைப்பின் தலைவிதான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் இணைந்து அரசியலில் செயல்பட்டால், மக்களுக்கான திட்டங்களை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, அதனையே நாங்கள் வலியுறுத்தி உள்ளோம் என்று ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

summary

A new welfare organization named ‘Ilaiya Puratchi Thalaivi Trisha Peravai’ has been launched in Trisha’s name, with its headquarters in Tirunelveli.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.