கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ கைது! சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கைகோரி மு.க. ஸ்டாலின் கூறியது குறித்து...
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காமல் தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் கைது - ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு நல்லொழுக்கச் சான்றிதழ் வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.