திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! முதல்வர் விஜய் ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக
முதல்வர் விஜய் ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து...
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நிர்வாகச் சீர்கேடு நிலவுவதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததைக் குறிப்பிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, "திருப்பரங்குன்றம் தீப வழக்கில், 'தமிழகத்தில் நிர்வாகச் சீர்கேடு நிலவுகிறது; அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்' என உச்ச நீதிமன்றம் சாடியிருப்பது, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு விழுந்த மாபெரும் சம்மட்டி அடியாகும்.
‘இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும்’ என உச்ச நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்குத் தமிழக ஆட்சி நிர்வாகத்தைத் தவெக அரசு சீரழித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
Advertisement
Advertisement
கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்ததோடு, தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை அதிகாரிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பது முதல்வர் ஜோசப் விஜய் அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சான்றாகும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, தவெக அரசின் இந்து விரோதப் போக்கிற்குக் கிடைத்த தக்க பதிலடி.
நவம்பர் 20 ஆம் தேதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியிருப்பதையும், நாளை (நவம்பர் 28) மத்தியப் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருப்பதையும், அனைத்து பக்தர்களும் தீபமேற்ற அனுமதி அளித்திருப்பதையும் மனதார வரவேற்கிறோம்.
இந்துக்களின் ஆலய மரபுகளையும் வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டுச் சிதைக்கும் ஜோசப் விஜய்யின் தவெக அரசு, தனது இந்து விரோதப் போக்கால் தமிழகத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான தீர்ப்பைக் கேட்ட பிறகும், முதல்வராக நீடிக்க ஜோசப் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. துளியளவேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால், இந்த நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.