திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! முதல்வர் விஜய் அரசுக்கு ஏன் இப்படி எரிகிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசை பாஜக விமர்சித்தது குறித்து...
மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்துவிரோத போக்குடன் இருப்பதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரனின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தீபத்தூணில் தீபமேற்றச் சொன்னால், முதல்வர் விஜய் அரசுக்கு ஏன் இப்படி எரிகிறது? வரும் மகா கார்த்திகை தீபத் திருநாளன்று, திருப்பரங்குன்றத் தீபத் தூணில் தீபமேற்றலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை, ‘மறு ஆய்வு’ செய்ய வேண்டுமெனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் அரசின் இந்துவிரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு, ஜோசப் விஜய் ஏன் இத்தனை பதறுகிறார்? உச்சநீதிமன்ற உத்தரவினை மதித்து, பிற அமைப்புகள் எல்லாம் அமைதி காக்கையில், தவெக அரசு மட்டும் எதற்கு இப்படி முந்திக்கொண்டு மறு ஆய்வு மனு தாக்கல் செய்கிறது? கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்துசமய அறநிலையத் துறையே, கந்தர் மலையை ‘சிக்கந்தர்’ மலையாக மாற்றத் துடிக்கிறதா? வாக்கு வங்கி அரசியலுக்காக ஜோசப் விஜய் இந்தளவிற்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா?
Advertisement
Advertisement
அதுமட்டுமன்றி, திருப்பரங்குன்றத் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கூடாது என நீதிமன்றங்களில் தொடர்ந்து மனுத் தாக்கல் செய்து வரும் தவெக அரசு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களின் வரிப்பணம் என்பதை மறந்து விடக்கூடாது. தன் கையை வைத்து தன் கண்களையே குத்துவதுபோல, முருக பக்தர்களின் பணத்தைக் கொண்டே அவர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக வாதிடும் ஜோசப் விஜய்க்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது.
எனவே, ‘அனைவருக்குமான ஆட்சி’ என்று கூறிக் கொண்டு, முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளை திட்டமிட்டு பறிக்கும் ஜோசப் விஜய்யின் தலைமையிலான இந்துவிரோத அரசுக்கு, முருக பக்தர்கள் கூடிய விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று கூறியுள்ளார்.