முகப்பு

திருப்பரங்குன்றம் மலைக்கு அதிகளவில் செல்லும் முஸ்லிம்கள்

திருப்பரங்குன்றம் மலைக்கு அதிகளவில் செல்லும் முஸ்லிம்கள் குறித்து...

17 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் மலைக்கு அதிகளவில் செல்லும் முஸ்லிம்கள்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் முஸ்லிம்கள் - டிஎன்எஸ்
பகிர்:

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவத்தை காண ஏராளமான இந்துக்கள் திருப்பரங்குன்றம் மலை மேல் சென்று வரும் நிலையில், முஸ்லிம்களும் தற்போது அதிகளவில் மலைக்கு செல்கின்றனர்.

​திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுவது வழக்கம். முன்னதாக, மலை உச்சியில் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், கடந்த 24-ஆம் தேதி கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

​இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மலையை மத்திய ரிசர்வ் காவல் படையினரின் (சிஆர்பிஎஃப்) கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. மேலும், பக்தர்கள் தீபமேற்றி வழிபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

​இதையடுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மேல் மகா தீபம் ஏற்றும் வைபவத்தைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் சனிக்கிழமை காலை முதலே திருப்பரங்குன்றம் வரத் தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் மலை மீது ஏறிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

​இந்தநிலையில், மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், "மத்திய ரிசர்வ் காவல் படையினர் வந்த பிறகே, அவர்களது உத்தரவின் அடிப்படையில் தீபத்தூண் அருகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை பக்தர்கள் மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம்" என அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வைபவத்தை காண ஏராளமான இந்துக்கள் திருப்பரங்குன்றம் மலை மேல் சென்று வரும் நிலையில், முஸ்லிம்களும் தற்போது அதிக அளவில் மலைக்கு செல்கின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள ஹஜ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில், சிறப்புத் தொழுகைக்காக, கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் உள்ளூர் முஸ்லிம்களும் தீவிர பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மலை மேல் உள்ள தர்காவிற்குச் செல்லும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவதற்கான அனைத்து ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மலை மேல் செல்பவர்களை வரிசையில் நிற்க வைத்து, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர். கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகே, மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தொழுகைக்காக ஏராளமானோர் தர்காவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Large numbers of Muslims visiting the Tirupparankundram hill

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.