தொகுதி மறுவரையறையில் திமுக உறுதி! இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை தோல்வி?
மு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை குறித்து...
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திமுக ஐடி விங் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (நவ. 30) தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்திருந்தது.
இதனையடுத்து, திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Advertisement
Advertisement
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், மமதா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஏன் ஆதரவு அளித்தது என மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை வாசல் வரை சென்று மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திமுகவின் ஐடி விங் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அளித்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்திய இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.