பாஜக என்றால் அவ்வளவு பயமா சிஎம் சார்: விஜய்யை கடுமையாக விமர்சித்த மு.க. ஸ்டாலின்
தாராபுரத்தில் முதல்வர் விஜய்யை மு.க. ஸ்டாலின் விமர்சித்தது குறித்து...
மத்திய பாஜக அரசைப் பார்த்து முதல்வர் விஜய் பயப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாராபுரம் தொகுதி சித்தராவுத்தன்பாளையத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "பொதுவாக ஓர் ஆட்சியின் முதல் 6 மாதங்களை தேனிலவு என்று சொல்வார்கள். ஆனால், முதல் 4 மாதங்களிலேயே நாறிப்போய் விட்டது இந்த ஆட்சி. தவெகவுக்கு வாக்காளிக்காத மக்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு வாக்களித்த மக்களுமே இப்போது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கிறார்களாம். இவையெல்லாம் பொய் எனத் தெரிந்தவர்கள், தமிழ்நாட்டை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்.
Advertisement
Advertisement
இந்த 4 மாதங்களில் சொல்லக்கூடிய சாதனைகள் என என்ன இருக்கிறது? மின்வெட்டு, அரிவாள் வெட்டு, பாலியல் கொடுமைகள், விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, பயிர்க்கடன் தள்ளுபடி என எதைச் சொல்வது?
சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இப்போது மக்கள் முன்பாக முதல்வர் நடித்துக் கொண்டிருக்கிறார். மைக் கிடைத்தால் போதும் என மனப்பாடம் செய்தவற்றையெல்லாம் பிரசார மேடையில் கத்துகிறார். ஆனால், மீடியா மைக்கை பார்த்தால் மட்டும் அவருக்கு அலர்ஜி. மேடையில் கத்துகிறார், சட்டப்பேரவையில் கத்துகிறார். மீடியா மைக்கில் கொஞ்சம் பொறுமையாவாவது பேசக் கூடாதா?
மேட்டூரில் அவரிடம் கண்ணாடி வாங்கிய பாட்டியும், காலை உணவுத் திட்டத்தில் சேர்ந்து உணவருந்திய சிறுமியும்கூட தைரியமாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர். ஆனால், இந்த ரீல்ஸ் முதல்வர் மட்டும் மீடியா என்று சொன்னாலே பயப்படுகிறார்.
இந்த லட்சணத்தில் என்னைப் பார்த்து 'வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்' என கத்துகிறார்.
நானும் கத்துகிறேன், சிஎம் சார். எல்லாவற்றுக்கும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேச மாட்டீர்கள்? இதை நான் கேட்கவில்லை. உங்களுக்கு ஆதரவளித்த கட்சிகளே கேட்கின்றனர். சிஎம் சார், என்ன சார் பயம்? பாஜக என்றால் அவ்வளவு பயமா சிஎம் சார்?" என்று கேள்வி எழுப்பினார்.
CM Vijay is afraid of the BJP government, says DMKChief M.K. Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.