தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்: தேர்தல் ஆணையத்தில் புகார்
தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் மு.க. ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து...
தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை பெட்டி பாமா, பல்டி பாமா எனக் கடுமையாக விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவரால் எப்படி பல்டி அடிக்க முடிந்தது என உருவ கேலி செய்தார் மு.க. ஸ்டாலின்.
Advertisement
Advertisement
மு.க. ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, தேர்தல் ஆணையம், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் தவெக வழக்கறிஞர் அணி புகார் மனு அளித்துள்ளனர். மேலும், பெண் வேட்பாளரை உருவ கேலி செய்து இழிவுப்படுத்திய மு.க. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு பிரசார மேடையில் ஒரு பெண்ணைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறார். இதுதான் அவரின் சொந்த நிலைப்பாடு.
அவர்கள் தரம்தாழ்ந்து, மூன்றாம் - நான்காம் நிலை நபர்களாக வீதிகளில் பேசுபவர்கள்போல ஆகிவிட்டனர். இதுதான் அவர்களின் உண்மையான முகம். மு.க. ஸ்டாலின் - உதயநிதி ஆகிய இருவரும் அப்பாவும் மகனும் மாறிமாறி வீதிகளில் தரம்தாழ்ந்து பேசி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சமுதாயத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டும். திமுகவின் அத்தியாயம் இத்துடன் முடிவடைந்து விட்டது. அதிமுக இன்று எந்த நிலைமையில் இருக்கிறதோ, இன்னும் 2 ஆண்டுகளில் அதே நிலைமைதான் திமுகவுக்கும்.
தேர்தலில் அவர்களால் வாக்கு சேகரிக்க முடியவில்லை. மு.க. ஸ்டாலினை காட்டியோ உதயநிதியை காட்டியோ செய்த சாதனைகளைக் காட்டியோ திமுகவினரால் வாக்கு கேட்க முடியவில்லை. அதனால், இப்போது வக்கிரத்தை காட்டி வாக்கு கேட்கின்றனர். இதுதான் அவர்களின் கடைசி ஆயுதம்.
இத்தனை ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடி அளவுக்குக் கொள்ளையடித்துள்ளனர். இனிவரும் தேர்தல்களில் உறுதியாக 100 சதவிகிதம் தோல்வியைத்தான் திமுக தழுவவிருக்கிறது.
இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியடையப் போகும் விரக்தியின் உச்சத்தில்தான், தன்னிலையை மறந்து திமுகவினர் பேசிக் கொண்டிருக்கின்றனர். மு.க. ஸ்டாலினின் பேச்சுக்கு அனைத்துத் தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இதுகுறித்து அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.
Complaint filed with the Election Commission alleging that DMK Chief M.K. Stalin mocked the appearance of TVK candidate Sathyabhama
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.