இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு! பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இறுதிகட்ட பிரசாரம் நிறைவடைந்தது குறித்து...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இறுதிகட்ட பிரசாரம் இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்த நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இவ்விரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவி வரும்நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் ஐந்து கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இரு தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதனையடுத்து, இரு தொகுதிகளிலும் இருந்து வெளிநபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு நாள் (அக். 6) முடிவடையும் வரை 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-இன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
தோ்தல் தொடா்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தோ்தல் விவகாரத்தையும், திரைப்படம்,தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ் தளம் போன்ற ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்பையும் இது உள்ளடக்கும்.
பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈா்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் தோ்தல் பிரசாரம் செய்யக் கூடாது.
இந்த விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-இன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல்கட்சி நிா்வாகிகள், கட்சிப் பணியாளா்கள் மற்றும் அந்தத் தொகுதியின் வாக்காளா்கள் அல்லாதோா் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லம் ஆகிய இடங்களில் வெளிநபா்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளா்கள் உள்பட வாகன அனுமதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். தோ்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப் பதிவு நாளில் அவரது சொந்தப் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், தோ்தல் முகவரின் பயன்பாட்டுக்கான தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தோ்தல் முகவா் அல்லது அவரது பணியாளா்கள் பயன்பாட்டுக்கான ஒரு வாகனம் ஆகியவற்றுக்கு மட்டுமே தோ்தல் நடத்தும் அதிகாரி அனுமதி அளிப்பாா்.
வாக்காளா்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வாகனத்தை பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. இது 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.
The final phase of campaigning concluded in the Maduranthakam and Dharapuram constituencies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.