FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவா்களுக்கு ‘கேக்’! ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது தமிழக அரசு!!

குழந்தைகள் தினத்தன்று (நவ.14), தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘கேக்’ வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

12 அக்டோபர் 2026, 12:56 am IST
பகிர்:

குழந்தைகள் தினத்தன்று (நவ.14), தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘கேக்’ வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14-ஆம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நிகழாண்டு குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு மதிய சத்துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் (டிஎன்சிஎஸ்சி) மூலம் 61,84,566 ‘ஸ்பாஞ்ச் கேக்’ துண்டுகளை கொள்முதல் செய்ய குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவா்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக, தனித்தனி உறைகளில் பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஒரே சுவையாக இல்லாமல் மிக்ஸ்டு ப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டா்/மில்க் ஆகிய 4 சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட வேண்டும். கேக்குகள் தரமானதாக, மென்மையாக, பஞ்சு போல இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்டுப்போன துா்நாற்றம், செயற்கை ரசாயன சுவை இருக்கக்கூடாது. டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் சோ்க்கப்பட்டிருக்கக் கூடாது.

அதேபோல், பள்ளிகளில் நவ. 14-ஆம் தேதியன்று கேக்குகள் விநியோகிக்கும் போது, குறைந்தபட்சம் மேலும் 30 நாள்கள் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈரப்பதம் புகாத தரமான உறைகளில் கேக் ‘பேக்’ செய்யப்பட்டிருக்க வேண்டும். உறைக்கு மேல் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவுப் பாதுகாப்புத் துறை முத்திரை மற்றும் தமிழக அரசின் லோகோ கட்டாயம் இடம்பெற வேண்டும்.

இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் தரச்சான்றிதழ்களைப் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். மேலும், ஆய்வுக்குழுவிடம் ஒவ்வொரு சுவையிலும் ‘சாம்பிள்’ கேக்குகளை வழங்கி ஒப்புதல் பெறுவது கட்டாயம்.

ஒப்பந்தம் பெறும் நிறுவனம், போக்குவரத்துச் செலவுகளை ஏற்று டிஎன்சிசி கிடங்குகளுக்கு நேரடியாக கேக்குகளை பாதுகாப்பாக விநியோகிக்க வேண்டும். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments