ஏமாற்று அரசியலில் ஒருநாளும் உடன்பாடு இல்லை: எடப்பாடி பழனிசாமி
போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் தொடங்கி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு....

அதிமுக ஆட்சியில் விதைத்த விதைகள், தற்போது விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் தொடங்கி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை புரிந்து, #ChennaiMetro #Phase2 திட்டத்தின் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தை துவக்கி வைத்துள்ள இந்தியப் பிரதமர் சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான அதிமுக அரசு இருந்த போது, இதற்கான DPR தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி பெற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
Advertisement
Advertisement
மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு.
மேலும், பிரதமரை பலமுறை நான் நேரில் சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம், வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதிமுக ஆட்சியில் நாம் விதைத்த விதைகள், தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், Tunnel அடியில் Safety Helmet போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை.
“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றிவரும் சென்னை மெட்ரோ அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.