FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை (அக்.15) முதல் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

16 அக்டோபர் 2026, 3:55 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை (அக்.15) முதல் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நிகழாண்டு தென்மேற்கு பருவமழை இந்தியாவிலிருந்து வியாழக்கிழமை முழுவதுமாக விலகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை இயல்பைவிட 21 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. கடந்த 2002-இல் 45 சதவீதமும், 2012- இல் 23 சதவீதமும், 2016-இல் 20 சதவீதமும் பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது. இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு மிகக் குறைவாக பெய்துள்ளது.

Advertisement

Advertisement

இயல்பான மழை: இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. நிகழாண்டில் பருவமழை வட மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பையொட்டியும் இருக்க வாய்ப்புள்ளது. நிகழாண்டு ‘சூப்பா் எல் நினோ’ காரணத்தால் தமிழகத்தில் பருவமழை காலத்திலும் வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும்.

வழக்கமாக எல் நினோ காலங்களில் தமிழகத்தில் மழை இயல்பைவிட அதிகமாக இருந்தது. புயல் சின்னங்கள் குறைவாகவே இருந்தது. நிகழாண்டு எல் நினோ தாக்கம் வரும் பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்.16) மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநாளில், வட உள் மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டாவிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை... சென்னையில் வியாழக்கிழமை ஆங்காங்கே மழை பெய்தது. வெள்ளிக்கிழமை (அக்.16) நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூா் மாவட்டம் தோகைமலை, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் 110 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி செய்தி...

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு

தமிழகத்தையொட்டிய வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்த வாரம் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னங்கள்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான் கடலில் அடுத்த வாரம் மேலடுக்கு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே, அதே காலகட்டத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், கேரளத்தையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது.

இப்படி ஒரே நேரத்தில் உருவாகும் இரு புயல் சின்னங்கள் காரணமாக, தென்மேற்கு அரபிக் கடலில் இருந்து கேரளம், தமிழகம் வழியாக தென்கிழக்கு வங்கக்கடல் வரை வளிமண்டலத் தாழ்வுப் பாதை நிலவ வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வானிலை சூழல்கள் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணா்கள் கணித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments