52 கோயில்களில் இன்று முதல் கைப்பேசிக்கு தடை! லாக்கரில் வைக்க ரூ. 5 கட்டணம்!
கைப்பேசியை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க ரூ. 5 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இன்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது.
இருப்பினும், சில கோயில்களில் புகைப்படம், விடியோ, தற்படம் (செல்ஃபி), ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தர்கள் பதிவு செய்வதாக புகார்கள் எழுந்தன.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து செப்.1 முதல் 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் கைப்பேசி கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த நடைமுறை அறநிலையத் துறையில் 52 முதுநிலை திருக்கோயில்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது. கைப்பேசியை ரூ. 5 கட்டணத்தில் பாதுகாப்பாக வைத்துச் செல்லலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த கோயில்களில்...?: கைப்பேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள 52 முதுநிலை கோயில்கள் பட்டியலில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், தஞ்சாவூா் பிரகதீஸ்வர சுவாமி கோயில், தென்காசி திருக்குற்றால நாத சுவாமி கோயில், வடலூர் சத்யஞான சபை வள்ளலார் தெய்வநிலையம் உள்ளிட்ட கோயில்கள் இடம்பெற்றுள்ளன.
An order prohibiting devotees and the general public from carrying mobile phones into 52 major temples in Tamil Nadu—which are under the control of the Hindu Religious and Charitable Endowments Department—has come into effect today (September 1).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.