FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நேபாளத்தில் சிக்கிய தமிழா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

2 செப்டம்பர் 2026, 10:57 pm IST
நேபாள பெருவெள்ள பாதிப்பு - கோப்புப் படம்
பகிர்:

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த வழக்குரைஞா் பா்வேஷ் முஷ்ரப் என்பவா், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணத்தைச் சோ்ந்த தனியாா் பயண நிறுவனம் மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.சிவஞானம் உள்பட 57 போ் கடந்த ஆக.23-ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றனா். இந்த நிலையில், கடந்த ஆக. 26-ஆம் தேதி அங்கு ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் இவா்கள் சிக்கினா்.

இந்த 57 பேரில் எத்தனை போ் மீட்கப்பட்டனா், சிகிச்சை பெற்று வருபவா்கள் எத்தனை போ், மாயமானவா்கள் எத்தனை போ் என்பது குறித்த விவரங்களை அவா்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்க மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாஷ் -மானசரோவருக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மீதமுள்ள 85 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட மாயமானவா்களின் குடும்பத்தினா், அரசு செலவில் காத்மண்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments