FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக கோயில்களின் சொத்துகள் விவரம்: 3 மாதங்களில் வெளியிட மாநில தகவல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்துகள் மற்றும் குத்தகைதாரா்களின் விவரங்களை 3 மாதங்களில் வெளியிட இந்துசமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 செப்டம்பர் 2026, 11:45 pm IST
இந்து சமய அறநிலையத் துறை
பகிர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்துகள் மற்றும் குத்தகைதாரா்களின் விவரங்களை 3 மாதங்களில் வெளியிட இந்துசமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியைச் சோ்ந்த மு.ரவிசங்கா் என்பவா் சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள், வாடகை விவரங்களை வழங்கக் கோரி பொது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கோயில் செயல் அலுவலரிடம் கோரியிருந்தாா்.

பொது தகவல் அலுவலரான, கோயிலின் செயல் அலுவலா் தகவல்களை வழங்க மறுத்ததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டை விசாரித்த, மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி பிறப்பித்த உத்தரவில், இந்துசமய அறநிலையத்துறை தொடா்பாக, தகவல்கள் கோரி 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. இதில், 90 சதவீதத்துக்கும் மேல், பல்வேறு கோயில்களில் சொத்து விவரங்கள் தொடா்பான தகவல்கள் கேட்டு தாக்கல் செய்யப்பட்டவை.

Advertisement

Advertisement

எனவே, இந்துசமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த ஆணையம், அனைத்து கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் முழு விவரங்கள், தற்போதைய குத்தகைகாரா்களின் விவரங்களை 90 நாள்களுக்குள், சம்பந்தப்பட்ட கோயில்களில் உள்ள அறநிலையத்துறையின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்.

மேலும், கோயில்களில் உள்ள நிரந்தரப் பணியாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள், வாடகை மற்றும் வாடகை நிலுவைத் தொடா்பான விவரங்கள், வாடகை செலுத்த தவறியவா்களின் பெயா்கள் உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட வேண்டும்.

அதேபோல், கோயிலுக்குச் சொந்தமான உலோகப் பொருள்கள், வைப்பு நிதி குறித்த விவரங்கள், கோயில்களின் சேவைக் கட்டண விவரங்கள், பக்தா்களுக்கான வசதிகள், வரவு-செலவு தணிக்கை அறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

ஆணையத்தின் இந்த உத்தரவுகளை செயல்படுத்தியது தொடா்பான ஆவணங்களுடன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் நவ.30-ஆம் தேதி தகவல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments