ரயில் சூட்கேஸில் பெண் சடலம்! ஆக்ரா காவல்துறையிடம் உடலைக் கோரும் சென்னை காவல்துறை
ரயில் சூட்கேஸில் வைக்கப்பட்ட பெண் சடலத்தை அனுப்புமாறு ஆக்ரா காவல்துறையிடம் சென்னை காவல்துறை கோரியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு விரைவு ரயிலில் சூட்கேஸில் வைக்கப்பட்ட பெண் சடலம், ஹையதுல்லா நிஷா என்பது அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது மிச்ச உடல் பாகங்களை ஆக்ரா காவல்துறையிடம் கோரியிருக்கிறது சென்னை காவல்துறை.
கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புது தில்லி சென்ற தமிழ்நாடு விரைவு ரயில் ஆக்ராவில் நின்றது. அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் பெண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்த நெகிழிப்பை உள்ளிட்டவற்றில் சென்னை முகவரி இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆக்ரா நிலைய ரயில்வே பாதுகாப்புப் படையினா் சென்னை இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி ஆண், பெண் இருவர் சூட்கேஸுடன் சென்ட்ரல் நிலையத்துக்கு வருவதும், அவா்கள் தமிழ்நாடு விரைவு ரயில் பெட்டியில் அதை வைத்து விட்டு, பூங்கா ரயில் நிலையம் நோக்கிச் செல்வதும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் ஆய்வு செய்த போதுதான், பிரியாணி டபராவில் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டன.
Advertisement
Advertisement
இது குறித்து சென்னை காவல்துறையினர் விசாரண நடத்தியதில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வாழ்ந்து வந்த மாணிக் உத்தின் லஸ்கர் (22), அவரது மனைவி பாகபதி மாஜி இருவரும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் தாம்பரத்தைச் சேர்ந்த ஹையதுன் நிஷா என்பதும் அடையாளம் காணப்பட்டு, அவரது மிச்ச உடல் பாகங்கள், மாணிக் வீட்டில் பிரியாணி டபராவில் வேகவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆக்ராவில் கைப்பற்றப்பட்ட ஹையதுன் நிஷாவின் உடல் பாகங்களை சென்னைக்கு அனுப்பிவைக்குமாறு கூடுவாஞ்சேரி காவல்துறையினர், ஆக்ரா காவல்துறையினருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். உடல் பாகங்களைக் கொண்டு தடயவியல் ஆய்வுகள் நடத்தினால்தான் கொலை நடந்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் கிடைக்கும். மேலும் உடல் பாகங்களைப் பொருத்திப் பார்த்து விசாரணையை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் உடல் பாகங்களைக் கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Woman body found in train Chennai police seek Nisha's body
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.