FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம்: கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:40 pm IST
கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகள்
பகிர்:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

இவர்களது புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் காவல்துறை, இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால், அருகில் உள்ள காவல்நிலையம் சென்று தகவல் அளிக்குமாறும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் இவர்களது புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொலையாளிகள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திலிருந்து, சடலத்தை வைத்த சூட்கேஸுடன் ரயிலில் ஏறியிருப்பது, மின்சார ரயிலில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கொலையாளிகள் வெளி மாநில நபர்கள் போல இருப்பதால், அவர்களது அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும், இதுவரை யாரும் காணாமல் போனதாக அப்பகுதியிலிருந்து ஒரு புகாரும் வராததால், கொலையானவரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.

Advertisement

Advertisement

சென்னை காவல்துறையினர் 350 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சூட்கேஸை வைத்துச் சென்ற ஆண் - பெண் ஜோடியை கண்டறிந்தனர். தில்லி செல்லும் ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு, அவர்கள், சென்டிரலில் இருந்து வெளியேறி பூங்கா ரயில் நிலையம் சென்று தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறியது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. ஆனால், இரண்டு வாரங்களாகியும் அவர்களது விவரம் தெரிய வராததால், அவர்களது விடியோ காட்சிகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

ஆக்ரா சென்ற விரைவு ரயிலில் இருந்த சூட்கேஸில் துர்நாற்றம் வீசியதால், ரயில்வே காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தனர். அதில் தலையில்லாத ஆண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பாலிதீன் கவரில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த உடல் துண்டுகள் சென்னை துணிக்கடைப் பையில் இருந்ததை வைத்துத்தான், ஆக்ரா காவல்துறை சென்னையிலிருந்து சூட்கேஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்து சென்னை காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தனர்.

இதையடுத்து சென்னை சென்டிரல் மற்றும் சென்னை பூங்கா ரயில் நிலையம் வரையிலான 350 சிசிடிவி கேமராக்களை, காவல்துறையினர் ஆய்வு நடத்தி, சூட்கேஸை எடுத்து வந்து வைத்துவிட்டுச் சென்ற தம்பதியை கண்டுபிடித்தனர். ஆனாலும், அந்த தம்பதியின் அடையாளமோ, கொலை செய்யப்பட்டவர் யார் என்ற விவரமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், அந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அந்த சூட்கேஸில் சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய துணிக் கடையின் நெகிழி பையும், ரசீது ஒன்றும் இருந்தது. எனவே, சூட்கேஸில் இருந்த உடலின் புகைப்படங்கள் மற்றும் பல விவரங்களை சென்னை காவல்துறை கோரியிருந்தது. அதன்படி உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை காணாமல் போனதாக புகார் வந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஆனால் கொலையானவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட வில்லை.

கொலையானவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டால், கொலையாளிகளை எளிதாக அடையாளம் காணலாம் என்றும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதுவரை துப்பு துலங்காததால், கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு மேமராக்களில் பதிவான காட்சிகளில், ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆண் - பெண் இருவர், ஒரு சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்ட்ரல் நிலையத்துக்கு வருவதும், அவா்கள் தமிழ்நாடு விரைவு ரயில் பெட்டியில் அதை வைத்து விட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, பூங்கா ரயில் நிலையம் நோக்கிச் செல்வதும் பதிவாகியிருக்கிறது.

இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையேயான 350 சிசிடிவி கேமராக்கள் இதற்காக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. அவர்கள் பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றனர். ஆனால், பூங்கா ரயில் நிலையத்திலிருந்து, தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் பதிவாகியிருக்கும் சிசிடிவி பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments