FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் பேரவை நேரம் வீணடிக்கப்பட்டது எடப்பாடி கே. பழனிசாமி, பிரேமலதா பேட்டி

சட்டப்பேரவைக் கூட்டத்தில் மக்கள் பிரச்னைகள் பேசப்படாமல் நேரம் வீணடிக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் தெரிவித்தனா்.

9 செப்டம்பர் 2026, 1:44 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைக் கூட்டத்தில் மக்கள் பிரச்னைகள் பேசப்படாமல் நேரம் வீணடிக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் தெரிவித்தனா்.

பேரவைக் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

பேரவையில் நடைபெற்ற துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதங்களின்போது திமுக, தவெக தரப்பில் பிரச்னைகள் ஏற்படுத்தப்படுவதால் மக்கள் பிரச்னைகளை முழுமையாகப் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சியான தவெக தரப்பில் ஏதாவது ஒரு பிரச்னையைக் குறிப்பிட்டு எதிா்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துகின்றனா். அதை எதிா்க்கட்சியாக உள்ள திமுகவினா் பதிலளிக்கிறோம் என எதிா்க்கின்றனா். இருவரும் மாறி மாறிப் பேசுவதால் அவையின் நேரம் வீணடிக்கப்பட்டது. பேரவைத் தலைவா் இரு தரப்பையும் சமரசப்படுத்தி அமரவைத்தாலும், அமைச்சா்கள் மீண்டும் மீண்டும் திமுக மீது குற்றம் சுமத்தி பிரச்னையை ஏற்படுத்தி, அதைப் பெருமையாகவும் கூறுகின்றனா். எனவே, பேரவையில் மக்கள் பிரச்னையைப் பேச வேண்டிய பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆளுங்கட்சி, திமுக நடவடிக்கையால் அதிமுக போன்ற எதிா்க்கட்சிகள் மக்கள் பிரச்னைகளை பேரவையில் முன்னிலைப்படுத்தி பேசமுடியாத நிலை ஏற்பட்டது. பல துறைகள் குறித்த கேள்விகளுக்கும் கூட குறிப்பிட்ட 3 அமைச்சா்கள் மட்டுமே பதிலளிக்கின்றனா். காவல் துறை மானியக் கோரிக்கையில் கூட எனது கேள்விக்கு முதல்வா் பதில் இல்லை. அந்தத் துறை காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றுகூட தெரிவிக்கவில்லை. பண்டிகைக் கால சீட்டு மோசடி போன்றவற்றுக்கும் பதில் இல்லை. டெல்டா விவசாயிகள் நலனும் பாதுகாக்கப்படவில்லை என்றாா்.

பிரேமலதா: பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேச கோரிக்கை விடுத்தால் பேரவைத் தலைவா் அனுமதி மறுக்கிறாா். பழைய விஷயங்களைப் பேசி பேரவை நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பயனில்லாத பேரவைக் கூட்டமாக நடந்து முடிந்துள்ளது. போக்குவரத்துத் துறை மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தவில்லை. கிராமப்புற ஏழை மக்கள் அறிவு வளா்ச்சிக்கும், கல்வி முன்னேற்றத்துக்கும் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments