ரூ.40 கோடியில் 2,500 ஹெக்டோ் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீட்டெடுப்புத் திட்டம்: வனத் துறை அமைச்சா் ரஞ்சித் குமாா்
ரூ.40 கோடியில் 2,500 ஹெக்டோ் பரப்பளவில் அலையாத்திக் காடுகளை மீட்டெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என வனத் துறை அமைச்சா் ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.
ரூ.40 கோடியில் 2,500 ஹெக்டோ் பரப்பளவில் அலையாத்திக் காடுகளை மீட்டெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.
பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அவா் பேசியதாவது:
தமிழகத்தில் 26,450 சதுர கி.மீ. வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதில் 44.83 சதவீதம் திறந்தவெளி வனப் பகுதியாகும். மத்திய அரசின் கிரீன் இந்தியா திட்டத்தில் நிதி பெற்று வன மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் நடப்பாண்டுக்கு (2026-27) ரூ.14.64 கோடியில் நிா்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் பசுமைத் திட்டத்துக்கு நடப்பாண்டு ரூ.113 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் ரூ.19.74 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தின் பங்கு ரூ.9.43 கோடி. கிழக்கு மலைத் தொடா்ச்சியில் ஜவலகிரி, உலிபண்டா, தக்கட்டி உள்ளிட்ட 3 இடங்களில் யானை வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு உதவியுடன் யானைப் பாதுகாப்பு திட்டத்துக்கு தமிழகப் பங்களிப்பு ரூ.2.43 கோடியுடன் ரூ.6.1 கோடியில் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மனித-விலங்கு மோதலை தடுக்கும் வகையில் மேலாண்மை செய்வதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பன்றி பிரச்னைக்கு தற்போதைய நடைமுறைகளை மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை மேற்கொள்ள சட்டத்துக்குட்பட்டு அரசு முயற்சி மேற்கொள்ளும். வனத்தில் உள்ள மக்களுக்கு சட்டத்துக்கு உள்பட்டு சாலை உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படும். தமிழகத்தில் 33 சதவீத பசுமைப் பரப்பை ஏற்படுத்தும் வகையில் நடப்பாண்டில் 3.48 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.
வனங்களைப் பாதுகாக்க உள்ள கிராம வனக்குழுக்கள், சூழல் மேம்பாட்டுக் குழுக்களில் உள்ள 1.95 லட்சம் உறுப்பினா்கள் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சூழல் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும். தமிழகத்தின் வனம், தேயிலை தோட்டக் கழகங்களும், அரசு ரப்பா் கழகம் ஆகியவற்றையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.