முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்தாா்
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026-ஐ விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்து, அதன் இலச்சினையும் அறிமுகம் செய்தாா்.
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026-ஐ விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தொடங்கி வைத்து, அதன் இலச்சினையும் அறிமுகம் செய்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவியா், கல்லூரி மாணவ- மாணவியா், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பா் 9 முதல் அக்டோபா் 4 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடைபெறுகின்றன.
போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியது: நிகழாண்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள, இதுவரை இல்லாத அளவுக்கு 26,38,267 வீரா், வீராங்கனைகள் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனா். கடந்த ஆண்டு 16.28 லட்சம் போ் பதிவு செய்திருந்த நிலையில், 10,09,918 பதிவுகள் அதிகமாக பதிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் போட்டிகளில், 14,86,912 பள்ளி மாணவ–மாணவியா்கள், 5,35,965 கல்லூரி மாணவ–மாணவியா்கள், 38,058 மாற்றுத்திறனாளிகள், 69,890 அரசு ஊழியா்கள், 5,07,741 பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்கின்றனா். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 1,09,633 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா். சென்னையில் 99,119 நபா்கள் பதிவு செய்துள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக பதிவாக 1,74,462 நபா்கள் பதிவு செய்துள்ளனா்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ளும் விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தோம். அதன்படி ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் தமிழகத்தைச் சோ்ந்த 36 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 2.52 கோடி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் விளையாட்டு வீரா்கள், உலக அரங்கில் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். எனவே, இளைஞா்கள், மாணவ, மாணவியா்கள் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாா், ஷமினா ரியாஸ் ஆகியோருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சா் வழங்கி, போட்டிக்கான சின்னம் மற்றும் கொடியினையும், சீருடையும் அறிமுகப்படுத்தி, மகளிா் கால்பந்து போட்டியினை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளா் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலா்/பொது மேலாளா் ரெ.சுமன், பொது மேலாளா் ல.சுஜாதா, அரசு அலுவலா்கள், விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.