FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் தேவையா?டி.ஜெயக்குமார் கேள்வி!

பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் தேவையா? என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

15 செப்டம்பர் 2026, 4:29 pm IST
தலைமைச் செயலகம்
பகிர்:

சென்னை, பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் தேவையா? என தவெக அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சரமாரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், இந்த உலகம் உள்ளவரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறினார்.

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வையொட்டி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் வருகை தந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், "இந்த உலகம் உள்ளவரை அதிமுக என்றும் நிலைத்து நிற்கும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மீனவர்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், லூப் சாலை மற்றும் சாந்தோம் சர்ச் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் இருப்பதாகவும், அங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருவதாகவும் கூறினார்.

ஏற்கனவே வாகனங்கள் நகர முடியாத அளவிற்குப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில், மக்களின் வரிப்பணமான 1,200 கோடியில் 25 ஏக்கரில் தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

பல பள்ளிகளில் குடிநீர் வசதி கூட இல்லாத நிலையில், மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கே பயன்படும் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும் என்றும், மீனவர்கள் தற்போது கூட்டம் கூட்டி இந்தத் திட்டத்திற்குத் தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறினார்.

பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் கலங்கரை விளக்கம் மற்றும் கிரீன்வேஸ் சாலைகளில் பேரிகார்டு போட்டு அடைத்துவிடுவார்கள் என்றும், தானேகூட பாஸ் வாங்கிக்கொண்டுதான் வரவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் வேதனை தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டமும் குடியிருப்புகளும் இல்லாத கிண்டி ராஜ்பவன் நெடுஞ்சாலைத்துறை மினி மண்டலத்திலோ அல்லது சென்னை அவுட்டரிலோ 5,000 கோடியில் தலைமைச் செயலகம், அமைச்சர்கள் பங்களா, எம்.எல்.ஏ விடுதி, அரசு அலுவலகங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டலாமே எனக் குறிப்பிட்ட அவர், சென்னையின் இதயமாகவும் நெரிசல் மிகுந்ததாகவும் இருக்கும் பகுதியில் நீதிபதிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்றார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், அதையும் மீறி அமைத்தால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள், அப்படியே கட்டினாலும் அது மீண்டும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத்தான் உருமாறும் என்றும் எச்சரித்தார்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாடு குறித்துப் பேசிய அவர், உச்சபட்ச மின்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை என்றும், தற்போது 4,000 மெகாவாட் மின்சக்தி தேவைப்படும் சூழலில் காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசிடம் பேசி கூடுதலாக மின்சாரம் பெற்று மின்வாரியத்தில் சேர்த்தால் மின்வெட்டு வராது என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பேட்டி அளிக்கும்போதே மின்வெட்டு ஏற்படும் அவலநிலை நிலவுவதாகச் சாடினார்.

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்தார்.

பட்டினம்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்தைக் கைவிட வேண்டும். சீரான மின் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள் ஏற்கனவே அதிமுகவின் தொகுதிகள் என்பதால், அங்கு அதிமுகவின் வெற்றி நிச்சயம் என்றும் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments