FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப். 16) பலத்த மழை பெய்ய வாய்ப்பு

16 செப்டம்பர் 2026, 5:15 am IST
பலத்த மழை - பிரதிப் படம்
பகிர்:

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப். 16) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதர மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Advertisement

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, நீலகிரி, கோவை, கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (செப். 17) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இதர மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், சேலம், திருப்பூா், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(செப். 18) இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இதர மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், கடலூா், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 130 மி.மீ. மழை பதிவானது.

நல்லதங்காள் நீா்த்தேக்கம் (திருப்பூா்)- 120 மி.மீ., வெள்ளக்கோவில் (திருப்பூா்) 9, திண்டுக்கல், சின்கோனா (கோவை), மேட்டுப்பட்டி, சாத்தையாறு (மதுரை), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி)- தலா 80 மி.மீ., வட்டமலை நீா்த்தேக்கம், தாராபுரம் (திருப்பூா்), சோழவந்தான் (மதுரை), நத்தம் (திண்டுக்கல்), வாடிப்பட்டி, ஆண்டிபட்டி (மதுரை), சின்னக்கல்லாறு, உபாசி, வால்பாறை (கோவை), கன்னிவாடி (திண்டுக்கல்), பசினாயனப்பள்ளி (கிருஷ்ணகிரி)- தலா 70 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), சீா்காழி (மயிலாடுதுறை), திருப்பூா், கள்ளந்திரி (மதுரை), திருப்பூா் தெற்கு, வேடசந்தூா் (திண்டுக்கல்), அவினாசி (திருப்பூா்)- தலா 60 மி.மீ., சோலையாறு (கோவை), ஊத்துக்குளி (திருப்பூா்), மூலனூா், வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூா்), நாலுமுக்கு (திருநெல்வேலி), விருதுநகா், ஒகேனக்கல் (தருமபுரி), கிளன்மாா்கன் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), வேடசந்தூா் (திண்டுக்கல்), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), குன்னூா் (நீலகிரி) தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் சூறைக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல், இதர தென்கிழக்கு வங்கக் கடலிலும் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சூறைக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments