FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் பற்றி.....

18 செப்டம்பர் 2026, 5:10 pm IST
முதல்வர் விஜய் ஆலோசனை.
பகிர்:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து, முதல்வர் விஜய் வரும் 22-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கடந்த கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தின்போது, காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்

ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும், ஊரகப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் செப். 22ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

தொடக்கப்பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பெரும் துணையாக அமையும்.

இக்கூட்டத்தில், முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். மேலும், மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

CM Vijay to Launch Expanded Breakfast Scheme for Classes 6-8 in Govt, Aided Schools on Sept 22 in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments