சென்னையில் உலகளாவிய திறன் மையம்! முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
முதல்வர் விஜய் முன்னிலையில் வால்க்ரீன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி...
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று கையெழுத்தானது,
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் ஜிசிசி (OMR GCC) வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எப் டவுன்டவுண் (DLF Downtown) தரமணி வளாகத்தில், முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம், உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக விளங்குகிறது. மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருள்கள் துறைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இம்மையம், தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் நிறுவப்படவுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில், முதல் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு மற்றும் வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் என்ற வகையில் இந்நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜிசிசி துறையில் உயர்மதிப்புக் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மேலும் ஊக்கமளிப்பதுடன், தமிழ்நாட்டின் ஜிசிசி வளர்ச்சிப் பயணத்தில் வால்கிரீன்ஸ் இணைவது, மாநிலம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், வால்கிரீன்ஸ் நிறுவனத்தினர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
In the presence of CM vijay, TN govt signed MoU with Wall Greens India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.